search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- எடப்பாடி பழனிசாமிக்கு விட்டுக்கொடுத்த ஜி.கே.வாசன்
    X

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- எடப்பாடி பழனிசாமிக்கு விட்டுக்கொடுத்த ஜி.கே.வாசன்

    • கடந்த 20 மாதங்களாக மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறோம்.
    • தற்போது எதிர்பாராத சூழல் காரணமாக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் மரணம் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தொகுதியை கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு தி.மு.க. ஒதுக்கீடு செய்து இருந்ததால் இந்த தடவையும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என்று தி.மு.க. தலைமை நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் களம் இறங்கப்போவது காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான இளங்கோவனா? அல்லது வேறு யாருக்காவது வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணியில் எந்த கட்சி போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

    கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி ஜி.கே.வாசனின் த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. எனவே இந்த தடவையும் த.மா.கா. போட்டியிடுமா? என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த யூகத்தை வலுப்படுத்தும் வகையில் ஜி.கே.வாசன் நேற்று முன்தினம் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. தலைவர்கள் ஜி.கே.வாசனை சந்தித்து பேசினார்கள்.

    இதற்கிடையே பாரதிய ஜனதாவும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட விரும்புவதாக தகவல்கள் வெளியானது. எனவே அ.தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசை எதிர்த்து எந்த கட்சி களம் இறங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதற்கு விடை அளிக்கும் வகையில் இன்று காலை ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியின் சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் இயக்கத்திற்கு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

    இத்தொகுதியில் த.மா.கா வேட்பாளராக எம். யுவராஜா அறிவிக்கப்பட்டு போட்டியிட்டார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அனைத்து தரப்பு மக்களும் வசிக்கிறார்கள்.

    தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அறிவித்த பொய்யான வாக்குறுதிகளையும் மீறி, எங்கள் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கடின உழைப்பால், வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற்று 58,396 வாக்குகள் பெற்றோம்.

    தொடர்ந்து அத்தொகுதியில், கடந்த 20 மாதங்களாக மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறோம். தற்போது எதிர்பாராத சூழல் காரணமாக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) காலை, அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் என்னை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து இடைத்தேர்தல் குறித்து பேசினார்கள்.

    அப்போது இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அ.தி.மு.க.வின் விருப்பத்தை என்னிடம் தெரிவித்தார்கள். அதன் அடிப்படையில் த.மா.கா.வின் மூத்த தலைவர்களுடனும், நிர்வாகிகளுடனும் ஆலோசனை செய்தேன்.

    மேலும் தற்போதைய அரசியல் சூழல், எதிர்கால பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கூட்டணியின் முதன்மைக் கட்சியான அ.தி.மு.க.வின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அ.தி.மு.க.வின் விருப்பத்தை த.மா.கா ஏற்றுக்கொண்டது.

    தமிழக மக்கள் நலன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நலன் ஆகியவற்றை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    எனவே ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட த.மா.கா.வின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் களப்பணி ஆற்றி கூட்டணி கட்சியின் வேட்பாளரது வெற்றிக்கும், கூட்டணிக்கும் உறுதுணையாக இருப்பார்கள் என்பதை த.மா.கா சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×