என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருட்டை பகுதி நேர தொழிலாக கொண்டு பெண்களுடன் உல்லாச வாழ்க்கை நடத்திய சென்னை பஸ் டிரைவர்
    X

    காளிதாஸ்

    திருட்டை பகுதி நேர தொழிலாக கொண்டு பெண்களுடன் உல்லாச வாழ்க்கை நடத்திய சென்னை பஸ் டிரைவர்

    • கொள்ளையடிக்கும் பொருட்களை கிடைக்கும் விலைக்கு விற்பனை செய்து பெண்களை லாட்ஜ்களுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.
    • கைதான காளிதாஸ் வசம் இருந்து கடப்பாரை, குல்லா, சாக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை ரெயில்வே மேம்பாலம் கீழ்பகுதியில் சந்தோஷ் (வயது 25) என்பவர் ஒரு போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ம் தேதி அவரது போட்டோ ஸ்டுடியோ பூட்டு உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான கேமரா, லென்ஸ் உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.

    இதுகுறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் ஆலோசனையின் பேரில் மணப்பாறை இன்ஸ்பெக்டர் கோபி தலைமையிலான தனிப்படை போலீசார் நொச்சிமேடு பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கிடமாக வந்த ஒரு நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதையடுத்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் போலீஸ் பிடியில் சிக்கியவர் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சந்திராபாளையம் பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் (வயது 56) என்பதும், மணப்பாறை சந்தோஷின் போட்டோ ஸ்டுடியோவில் கைவரிசை காட்டிய பலே கில்லாடி என்பதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் கேமரா லென்ஸ் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். மீண்டும் மணப்பாறை பகுதியில் கொள்ளையடிக்க நோட்டமிட வந்த போது போலீஸ் பிடியில் சிக்கி உள்ளார்.

    பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் காளிதாஸ் குறித்து பல்வேறு பரபரப்பு தகவல்கள் கிடைத்தது. இது தொடர்பாக விசாரணை அதிகாரி ஒருவர் கூறும்போது:-

    இந்த நபர் சென்னையில் தனியார் பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். சென்னை-பெங்களூரு, சென்னை-ஹைதராபாத் செல்லும் பஸ்களை இயக்கி வந்துள்ளார். சிறுவயதிலேயே சின்ன சின்ன பொருட்களை திருடும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் போலீஸ் பிடியில் சிக்கிக் கொள்ளாததால் பகுதி நேர தொழிலாக விடுமுறை எடுத்துக்கொண்டு ஆங்காங்கே ரூம் போட்டு நோட்டமிட்டு போட்டோ ஸ்டூடியோக்களை குறி வைத்து கைவரிசை காட்டி வந்துள்ளார்.

    இவர் மீது 70க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதுவரை எந்த வழக்கிலும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படாததால் திருட்டுத் தொழிலை கைவிடவில்லை.

    கொள்ளையடிக்கும் பொருட்களை கிடைக்கும் விலைக்கு விற்பனை செய்து பெண்களை லாட்ஜ்களுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.

    இதனை காளிதாஸ் வாடிக்கையாக வைத்துள்ளார். எந்த பெண்களையும் அவர் உல்லாசத்திற்கு நிரந்தரமாக வைத்து கொண்டதில்லை.

    பெருநகரங்களில் ரூம் போடுவார். பின்னர் வலையில் சிக்கும் பெண்களை அழைத்து உல்லாசமாக இருந்துவிட்டு பணத்தை கொடுத்து அனுப்பி விடுவார். பின்னர் அந்த காசு தீர்ந்ததும் மீண்டும் ஒரு இடத்தில் சென்று ரூம் போட்டு நோட்டமிட்டு கொள்ளையடிப்பார்.

    திருட்டில் அதிகபட்சமாக போட்டோ ஸ்டூடியோக்களே இடம் பெற்றுள்ளன. இதற்காக சில யுக்திகளை அவர் கையாண்டு உள்ளார்.

    கொள்ளையடிக்க செல்லும்போது கடப்பாரை, முகத்தை மறைக்க குல்லா, ரேகைகள் பதிவாகாமல் தப்பிக்க சாக்ஸ் கொண்டு செல்வாராம்.

    குறிப்பாக பூட்டை உடைக்கும் போது அக்கம் பக்கத்தில் சத்தம் கேட்காமல் இருப்பதற்காக சணல் சாக்கினை தண்ணீரில் நனைத்து அதனை ஒரு பையில் போட்டு கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். உடைக்கும்போது அதனை பூட்டுக்கு மேல் போட்டு விடுவாராம்.

    ஒருமுறை கூட கையும் களவுமாக காளிதாஸ் சிக்கவில்லை. கைதான காளிதாஸ் வசம் இருந்து கடப்பாரை, குல்லா, சாக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

    திருட்டு மற்றும் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வருவதால் காளிதாசுக்கும் அவரது குடும்பத்துக்கும் பெரிய இடைவெளி உள்ளது என்றார்.

    Next Story
    ×