search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அண்ணாமலை யாத்திரைக்கு அனுமதி மறுப்பு
    X

    அண்ணாமலை யாத்திரைக்கு அனுமதி மறுப்பு

    • 198 தொகுதிகளில் அண்ணாமலை யாத்திரையை நிறைவு செய்துள்ளார்.
    • சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டு உள்ளார். இந்த நடைபயண யாத்திரையை கடந்த ஆண்டு ஜூலை 28-ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ராமேஸ்வரத்தில் தொடங்கி வைத்தார்.

    ஒவ்வொரு சட்டசபை தொகுதியாக அண்ணாமலையின் யாத்திரை நடந்து வருகிறது. பொதுமக்கள் மத்தியில் இந்த யாத்திரைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

    அண்ணாமலை செல்லும் ஊர்களில் எல்லாம் கூட்டம் திரள்கிறது. அவருக்கு மக்கள் வரவேற்பு கொடுத்து செல்பி எடுக்கிறார்கள். இதன் காரணமாக தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இன்றுவரை 198 தொகுதிகளில் அண்ணாமலை யாத்திரையை நிறைவு செய்துள்ளார். நேற்று அவர் திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆவடி பகுதிகளில் யாத்திரை மேற்கொண்டார்.

    இன்று (சனிக்கிழமை) உத்திரமேரூர், காஞ்சிபுரம், பூந்தமல்லி தொகுதிகளில் அண்ணாமலை நடை பயணம் மேற்கொண்டு பேச இருக்கிறார். பூந்தமல்லி நசரத்பேட்டையில் இன்று இரவு 8 மணிக்கு அவரது இன்றைய யாத்திரை நிறைவு பெறுகிறது.

    இன்று இரவு பூந்தமல்லியில் பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேச அனுமதி கேட்கப்பட்டுள்ளது. ஆனால் போலீசார் இன்று மதியம் வரை அனுமதி வழங்கவில்லை.


    நாளை (ஞாயிற்றுக்கிழமை) அவரது நடைபயணம் சென்னையில் நிறைவு பெறுகிறது.

    இதையடுத்து சென்னை திருவல்லிக்கேணி தொகுதியில் நாளை யாத்திரை செல்ல அண்ணாமலை திட்டமிட்டு இருந்தார். இந்த யாத்திரையில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' யாத்திரையின் சென்னை நடை பயணத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். வடமாநிலங்களில் பா.ஜ.க. நடத்தும் பேரணியில் கலவரம் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு நடைபயணத்துக்கு அனுமதி மறுக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.

    என்றாலும் நடைபயணத்தை திட்டமிட்டபடி நடத்த பா.ஜனதா கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக மீண்டும் போலீசாரிடம் அனுமதி கேட்டு மனு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவை சென்னை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இதுகுறித்து சென்னை உயர் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "அண்ணாமலையின் நடைபயண திட்டம் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அவர் நாளை காலை சென்னையில் நடைபயணம் செல்ல அனுமதிப்பது குறித்து கமிஷனர் இறுதி முடிவு எடுப்பார்" என்று கூறினார்.

    போலீசார் இதுவரை அனுமதி வழங்கவில்லை. அனுமதி கிடைக்காத பட்சத்தில் தடையை மீற பா.ஜ.க. வினர் திட்டமிட்டுள்ளதால் போலீசார் உஷார்படுத்தப் பட்டுள்ளனர். சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே அமைந்த கரை புனித ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் நாளை மாலை பா.ஜ.க. பொதுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படுவதாக தகவல்கள் வெளியானது. தற்போது அந்த இடம் மாற்றப்பட்டு உள்ளது.

    அமைந்தகரைக்கு பதில் சென்னை சென்ட்ரல் அருகே மின்ட் தங்க சாலையில் பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கசாலையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் நட்டா பங்கேற்று உரையாற்றுகிறார் இந்த கூட்டத்துக்கு சென்னை போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.

    Next Story
    ×