என் மலர்
தமிழ்நாடு

தமிழகத்தில் 15 ஆண்டுகளை கடந்த பேருந்துகளுக்கு பதில் புதிய ஊர்திகளை இயக்க வேண்டும்- அன்புமணி கோரிக்கை
- வாழ்நாள் முடிந்த பேருந்துகளை இயக்கும் தீமைக்கு பொதுமக்களுக்கு சேவை வழங்க வேண்டும் என்பது நியாயமான காரணமாக இருக்க முடியாது.
- 15 ஆண்டுகளைக் கடந்த வணிகப் பயன்பாடு ஊர்திகளை கழிவு செய்யும் திட்டம் கடந்த பல ஆண்டுகளாகவே ஆய்வில் இருந்து வருகிறது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
டெல்லியில் மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடைபெற்ற மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், ''தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகளும், 2500 பிற அரசுத்துறை ஊர்திகளும் 15 ஆண்டுகளைக் கடந்தவை.
பேருந்துகளை கழிவு செய்தால் மக்களுக்கான போக்குவரத்துச் சேவை பாதிக்கப்படும் என்பதால், அவற்றை மேலும் ஒன்றரை ஆண்டுகள் இயக்க அனுமதிக்க வேண்டும்'' எனக் கோரியிருக்கிறார். இது ஏற்கத்தக்கதல்ல.
வாழ்நாள் முடிந்த பேருந்துகளை இயக்கும் தீமைக்கு பொதுமக்களுக்கு சேவை வழங்க வேண்டும் என்பது நியாயமான காரணமாக இருக்க முடியாது. 15 ஆண்டுகளைக் கடந்த வணிகப் பயன்பாடு ஊர்திகளை கழிவு செய்யும் திட்டம் கடந்த பல ஆண்டுகளாகவே ஆய்வில் இருந்து வருகிறது.
அதை கருத்தில் கொண்டு மூன்றாண்டுகளுக்கு முன்பிருந்தே அரசு தயாராகியிருக்க வேண்டும்.
15 ஆண்டுக்கு மேலான பேருந்துகளும், ஊர்திகளும் சுற்றுச்சூழலுக்கு சரி செய்ய முடியாத அளவுக்கு சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமின்றி, அவை அவற்றில் பயணிப்பவர்களுக்கு மட்டுமின்றி, சாலையில் செல்வோருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. இவற்றைக் கருத்தில் கொண்டு 15 ஆண்டுகளைக் கடந்த அரசுப் பேருந்துகளையும், பிற அரசுத்துறை ஊர்திகளையும் உடனடியாக பயன்பாட்டிலிருந்து நீக்க வேண்டும்; அவற்றுக்கு மாற்றாக புதிய ஊர்திகளை அரசு இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.