என் மலர்
தமிழ்நாடு

2026-ல் பா.ம.க. கண்டிப்பாக ஆட்சிக்கு வரும்: அன்புமணி ராமதாஸ்

- அரையிறுதி போட்டியான பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் தான் இறுதிப் போட்டியான 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு செல்ல முடியும்.
- பாராளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து ராமதாஸ் முடிவு செய்வார்.
கடலூர்:
கடலூர் பாராளுமன்ற தொகுதி கடலூர், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் கடலூர் வன்னியர் திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. மாநில தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-
பா.ம.க. கட்சி தொடங்கி 35 ஆண்டு காலம் ஆகிய நிலையில் எத்தனையோ போராட்டங்கள், மக்கள் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றோம். பா.ம.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே பல்வேறு பிரச்சனைகளுக்கும், கொள்கை முடிவுகளுக்கும் தீர்வு கண்டு அதிகாரத்திற்கு வந்து செய்வதை விட அதிகாரம் வருவதற்கு முன்பே முதலமைச்சரை கையெழுத்து போட வைப்பது தான் சாதனை. அதை தான் பா.ம.க. செய்து வருகிறது.
வருகிற 2026-ம் ஆண்டு பா.ம.க. ஆட்சிக்கு கண்டிப்பாக வரும். அதற்கு முன்னோட்டம் தான் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் ஆகும். தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகின்றேன். அனைத்து தரப்பு மக்களும் அடுத்தடுத்து பா.ம.க. தான் ஆட்சிக்கு வரும் என்கிறார்கள்.
ஆகவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். அரையிறுதி போட்டியான பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் தான் இறுதிப் போட்டியான 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு செல்ல முடியும். பாராளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து டாக்டர் ராமதாஸ் முடிவு செய்வார். நீங்கள் வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்ய வேண்டும். மேலும் கடலூர் பாராளுமன்ற தொகுதியில் பா.ம.க. மிகப்பெரிய வெற்றி பெற போகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.