search icon
என் மலர்tooltip icon

  தமிழ்நாடு

  தமிழ் கலாச்சாரத்தை உலகமெங்கும் பரப்பினார்: 3-வது முறையாக மோடி பிரதமராவது உறுதி- அண்ணாமலை
  X

  தமிழ் கலாச்சாரத்தை உலகமெங்கும் பரப்பினார்: 3-வது முறையாக மோடி பிரதமராவது உறுதி- அண்ணாமலை

  • மிகவும் கெட்டுவிட்ட தமிழகத்தை மீட்டெடுக்க பா.ஜனதாவால் மட்டுமே முடியும்.
  • போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட ஒரே ஆட்சி தி.மு.க ஆட்சி தான்.

  தஞ்சாவூர்:

  தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழகத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் திருவையாறில் தனது பாதயாத்திரையை தொடங்கினார். பின்னர் மாலையில் தஞ்சை கொடிமரத்து மூலையில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்கினார்.

  அவருக்கு பா. ஜனதா சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் அண்ணாமலையிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.

  இதையடுத்து அண்ணாமலை வடக்கு வீதி, மேலவீதி, தெற்கு வீதி வழியாக பாதயாத்திரை மேற்கொண்டு கீழ வீதி நிக்கல்சன் கூட்டுறவு வங்கி அருகே வந்தார். அவருடன் ஏராளமான பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பாதயாத்திரையாக வந்தனர்.

  இதைத்தொடர்ந்து அண்ணாமலை பேசியதாவது:-

  தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர். மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக இந்த என் மண் என் மக்கள் பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது 113 ஆவது தொகுதியாக தஞ்சாவூர் தொகுதியில் நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. அதுவும் கார்த்திகை தீப திருநாளில் பாதயாத்திரை மேற்கொண்டது சிறப்பு வாய்ந்தது. இந்த பாதயாத்திரை ஜனவரி மாதம் சென்னையில் நிறைவடையும் போது அகில இந்திய அளவில் புரட்டி போட்டு இருக்கும்.

  தமிழகத்தில் சாலை, பாலம் உள்பட ஒரு பணியும் உருப்படியாக நடைபெறவில்லை. மிக மோசமான அளவுக்கு தமிழகத்தை தி.மு.க மாற்றி வைத்துள்ளது. மிகவும் கெட்டுவிட்ட தமிழகத்தை மீட்டெடுக்க பா.ஜனதாவால் மட்டுமே முடியும்.

  தமிழ் கலாச்சாரத்தை உலகெங்கும் பரப்பியவர் பிரதமர் மோடி. புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் செங்கோல் வைத்து பெருமை சேர்த்துள்ளார். டெல்லியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் வைக்கப்பட்ட பெரிய நடராஜர் சிலை சுவாமி மலையில் இருந்து தான் சென்றது. மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் பேசும் மனதின் குரல் நிகழ்ச்சியில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை குறித்து பேசினார். அதன் பிறகு தலையாட்டி பொம்மை விற்பனை 240 சதவீதம் அதிகரித்துள்ளது. இப்படி தமிழின் புகழை உலகெங்கும் பரப்பியதில் முக்கிய பங்காற்றி வருகிறார். தமிழினத் தலைவர் பிரதமர் மோடி.

  அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தூக்கி எறியப்பட வேண்டும். 2026 தமிழக சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க.வை அகற்ற வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்.

  வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் 400-க்கும் அதிகமான மக்களவை உறுப்பினர்களுடன் மீண்டும் 3-வது முறையாக பிரதமராக மோடி பொறுப்பேற்கவுள்ளார். அதில், தஞ்சாவூர் தொகுதியிலிருந்தும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, மோடியின் அமைச்சரவையை அலங்கரிக்கச் செய்ய மக்கள் முன்வர வேண்டும்.

  உதான் திட்டத்தின் கீழ் தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு 20 இருக்கைகள் கொண்ட விமானச் சேவை தொடங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தை பா.ஜனதா அரசுதான் கொண்டு வந்துள்ளது .

  எந்த மாநிலங்களிலும் இல்லாத ஒன்று தமிழகத்தில் நடந்துள்ளது. அதாவது போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட ஒரே ஆட்சி தி.மு.க ஆட்சி தான்.

  கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சியில் இருந்தவரை தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் வந்து கொண்டிருந்தது. ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் தான் தண்ணீர் வரவில்லை. இதனால் முப்போகம் விளையும் டெல்டா மாவட்டங்களில் விளைநிலங்கள் தரிசாக கிடைக்கிறது. நெல் உற்பத்தியும் கணிசமாக குறைந்துள்ளது. தேர்தல் நேரத்தில் கூறிய வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை எதையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. தஞ்சை மாவட்டத்திற்கு அளித்த தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை.

  இவ்வாறு அவர் பேசினார்.

  Next Story
  ×