search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுபிரியர்கள் வசதிக்காக மூடப்பட்ட பள்ளிக்கூட வாசல்- 400 மீட்டர் சுற்றி செல்லும் மாணவிகள்
    X

    மதுபிரியர்கள் வசதிக்காக மூடப்பட்ட பள்ளிக்கூட வாசல்- 400 மீட்டர் சுற்றி செல்லும் மாணவிகள்

    • பிரச்சினை தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.
    • டாஸ்மாக் கடையை மூடாமல் இந்த கேட்டை திறக்க முடியாது.

    சென்னை:

    சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் மாநகராட்சி பெண்கள் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    டி.எச்.ரோடு பகுதியில் பள்ளியின் பின்பக்க கேட் உள்ளது. மாணவிகள் பலர் இந்த வாசல் வழியாக பள்ளிக்கு செல்வது வழக்கம். இங்குள்ள பாசுதேவ் தெருவில் பள்ளியில் இருந்து 40 மீட்டர் தொலைவில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. மாணவிகள் இந்த பகுதி வழியாக செல்லும்போது மது குடித்துவிட்டு வருவோரால் இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு இங்கு பயிலும் மாணவி இந்த வாசல் வழியே பள்ளி முடிந்து சென்றபோது மதுபோதையில் 4 வாலிபர்கள் பின் தொடர்ந்தனர். அந்த மாணவி கொருக்குப்பேட்டையில் உள்ள வீட்டுக்கு செல்லும்வரை அந்த வாலிபர்கள் பின்னால் தொடர்ந்து சென்றுள்ளனர். தினமும் பள்ளி முடியும் வேளையில் மாணவிகளிடம் பேசுவதற்காக சில ஆசாமிகள் காத்திருப்பதும், மாணவிகளை பின்தொடர்ந்து செல்வதும் வாடிக்கையாகி உள்ளது.

    இந்த பிரச்சினை அதிகமானதால் மாணவிகளின் பாதுகாப்பு கருதி பள்ளியின் கேட் மூடப்பட்டது. இது மதுப்பிரியர்களுக்கு மிகவும் வசதியாக போய்விட்டது. ஆனால் மாணவிகள் பிரதான கேட் அமைந்துள்ள டி.எச்.சாலையை எம்.சி.எம்.கார்டன் 1-வது தெருவழியாக 400 மீட்டர் தூரம் சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக பள்ளி நிர்வாக குழுவில் உள்ள அந்த பகுதி வார்டு கவுன்சிலர் ரேணுகா கூறுகையில், இந்த பிரச்சினை தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. மாணவிகளின் பாதுகாப்பு கருதியே பள்ளியின் பின்பக்க கேட் மூடப்பட்டு உள்ளது. இங்குள்ள டாஸ்மாக் கடையை மூடாமல் இந்த கேட்டை திறக்க முடியாது.

    இதுபற்றி மாவட்ட கலெக்டர் மற்றும் டாஸ்மாக் அதிகாரியிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பள்ளிக்கு பின்னால் ஒரு நூலகம் உள்ளது. டாஸ்மாக் கடை இயங்குவதால் பள்ளி நேரத்தில் கூட நூலகத்தில் மாணவிகள் உட்கார முடியவில்லை என்றார். பள்ளி தலைமை ஆசிரியை கோகிலா கிரேஸ் கூறுகையில், டாஸ்மாக் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால்தான் பின்பக்க கேட்டை திறக்க முடியும் என்றார். இதுபற்றி ராயபுரம் எம்.எல்.ஏ. ஆர்.மூர்த்தி கூறுகையில், மாணவிகளுக்கு இடையூறாக இருந்தால் அந்த டாஸ்மாக் கடை மூடப்படும் என்றார்.

    Next Story
    ×