search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை... ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு குற்றச்சாட்டு
    X

    அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை... ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு குற்றச்சாட்டு

    • பொதுக்குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்ட படிவங்களை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப உள்ளனர்.
    • அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறி உள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர்

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை பொதுக்குழு தேர்ந்தெடுக்கவேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இணைந்து வேட்பாளரை தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுக்குழுவை கூட்டி வேட்பாளர் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளும் பணியை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனிடம் உச்ச நீதிமன்றம் ஒப்படைத்தது.

    அதன்படி வேட்பாளர் தேர்வு தொடர்பான படிவங்கள் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு, கையொப்பம் பெறப்பட்டு வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அந்த படிவத்தில் எடப்பாடி தரப்பினர் அறிவித்த வேட்பாளர் தென்னரசுவை வேட்பாளராக ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்களா? என்று கேட்கப்பட்டு பதில் அளிக்கும்படி கூறப்பட்டிருந்தது. பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கும் கருத்துக்களை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப உள்ளனர்.

    இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துடன் இன்று அவரது ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது வைத்திலிங்கம் கூறியதாவது:-

    வேட்பாளர் தேர்வு தொடர்பாக தமிழ் மகன் உசேன் அனுப்பியு கடிதம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. எந்த நோக்கத்திற்காக உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியதோ அதை அவைத்தலைவர் நிராகரித்துள்ளார். அவரது செயல் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உள்ளது.

    பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியது. ஆனால், அவர்கள் அறிவித்த வேடப்ளர் தென்னரசு பெயரை மட்டும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்று கூறியிருப்பது சரியல்ல. வேட்பாளரை பொதுக்குழுதான் முடிவு செய்ய வேண்டும். அப்படியிருக்கையில், முன்கூட்டியே ஒருவரை அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கிறார் என்றால், அவர்கள் முன்கூட்டியே வந்துவிட்டு கருத்து கேட்டிருக்கிறார்கள். இது வேட்பாளர் தேர்வு கிடையாது, பொது வாக்கெடுப்பு முறையாகும்.

    அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறி உள்ளார். தேர்தல் முறை நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெறவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சட்டவிரோத செயலுக்கு தங்களின் ஆதரவு இருக்காது என்றும், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிட உள்ளதாகவும் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

    Next Story
    ×