search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொங்கு மண்டலத்தை குறிவைக்கும் பிரதமர் மோடி... திராவிட கட்சிகளை விஞ்சி சாதிக்குமா?
    X

    கொங்கு மண்டலத்தை குறிவைக்கும் பிரதமர் மோடி... திராவிட கட்சிகளை விஞ்சி சாதிக்குமா?

    • மத்தியில் 3-வது முறையாக ஆட்சியை பிடிப்போம் என்று சபதத்துடன் பிரதமர் மோடியும், பா.ஜ.க.வினரும் களமிறங்கி உள்ளனர்.
    • பா.ஜ.க.வின் திட்டத்தை தவிடுபொடியாக்கி வெற்றிக்கனியை பறிக்க தி.மு.க., அ.தி.மு.க.வும் பல்வேறு வியூகங்களை அமைத்து களமிறங்கி உள்ளன.

    கோவை, திருப்பூர், ஈரோடு, பல்லடம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர் போன்ற மேற்கு மாவட்டங்கள் கொங்கு மண்டலங்கள் என அழைக்கப்படுகிறது.

    ஒவ்வொரு தேர்தலின்போதும் இந்த கொங்கு மண்டலம் தனிக்கவனம் பெறும். காரணம் இங்கு கிடைக்கும் அதிகப்படியான வெற்றி அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தி விடும். இதற்கு கடந்த பல தேர்தல்கள் உதாரணம் ஆகும். அ.தி.மு.க. அடுத்தடுத்து பல முறை தமிழகத்தில் ஆட்சி அமைக்க காரணமாக இருந்தது இந்த கொங்கு மண்டலம் தான்.

    இதன்காரணமாக அ.தி.மு.க., தி.மு.க. மட்டுமல்லாமல் அனைத்து அரசியல் கட்சிகளும் கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை ஏற்படுத்த முயல்கின்றன. கடந்த சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. அதிகப்படியாக தொகுதிகளை வென்றது. ஆனால் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. அ.தி.மு.க. 9 தொகுதிகளிலும், பா.ஜ.க. ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. இவ்வாறு அரசியலில் பல அதிர்ச்சிகளையும், மாற்றங்களையும் ஏற்படுத்தி விடும் இந்த கொங்கு மண்டல தொகுதிகள்.

    தற்போது பாராளுமன்ற தேர்தல் விறுவிறுப்படைந்துள்ளது. மத்தியில் 3-வது முறையாக ஆட்சியை பிடிப்போம் என்று சபதத்துடன் பிரதமர் மோடியும், பா.ஜ.க.வினரும் களமிறங்கி உள்ளனர். கடந்த 2 முறை வடநாட்டில் பெற்ற வெற்றியை கொண்டே பா.ஜ.க. ஆட்சியை பிடித்துள்ளது. தற்போது தென்மாநிலங்களை குறிவைத்து பா.ஜ.க. களமிறங்கி இருக்கிறது. அதுவும் தமிழகத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்றும் முனைப்பில் பா.ஜ.க. ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக பிரதமர் மோடி அடுத்தடுத்து தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். இதில் கொங்கு மண்டலத்தில் பிரதமர் மோடி அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

    கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை தொகுதி பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இருமுறை இந்த தொகுதியில் பா.ஜ.க. வெற்றி பெற்றிருப்பதே இதற்கு காரணம் ஆகும். கோவை தொகுதி தவிர பொள்ளாச்சி, திருப்பூர், சேலம் மற்றும் நீலகிரி உள்ளிட்ட தொகுதிகளையும் பா.ஜ.க. குறிவைத்துள்ளது. இந்த தொகுதிகளை கைப்பற்றும் நோக்கில் பிரதமர் மோடியின் சுற்றுப்பயணங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    ஏற்கனவே கடந்த மாதம் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் போன்ற பகுதிகளை மையமாக கொண்ட பல்லடத்தில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் நடைபயண யாத்திரையின் நிறைவு விழாவாக அந்த கூட்டம் அமைந்தது. இந்த கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால் பிரதமர் மோடி மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்த கூட்டம் பா.ஜ.க. ஓட்டாக மாறும் என அவர் கணக்கு போட்டுள்ளார்.

    அதைத்தொடர்ந்து அவர் கொங்கு மண்டலத்துக்கு நாளை மறுநாள் (18-ந் தேதி) மீண்டும் வருகை தர உள்ளார். கோவை கவுண்டம்பாளையம்-ஆர்.எஸ்.புரம் இடையே நடைபெற உள்ள ரோடு ஷோவில் பங்கேற்று பொதுமக்களை நேரடியாக சந்திக்க இருக்கிறார். பேரணி இறுதியில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்ற திட்டமிட்டுள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்களையும் பங்கேற்ற செய்ய பா.ஜ.க. மாநில தலைமை ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன்பின் மறுநாள் (19-ந் தேதி) மீண்டும் பிரதமர் மோடி கொங்கு மண்டலத்தின் மற்றொரு பகுதியான சேலத்துக்கு வருகிறார். அங்கு நடைபெறும் பிரசார கூட்டத்திலும் மோடி பங்கேற்று பேச உள்ளார். அதன்பின் மற்றொரு கட்ட பிரசாரத்துக்கும் கொங்கு மண்டலத்துக்கு வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பிரதமர் வருகையால் கொங்கு மண்டல பா.ஜ.க.வினரும் உற்சாகம் அடைந்துள்ளனர். அவர்கள் வெற்றியை குறிவைத்து களப்பணியாற்றி வருகிறார்கள்.

    இதற்கிடையே பா.ஜ.க.வின் திட்டத்தை தவிடுபொடியாக்கி வெற்றிக்கனியை பறிக்க தி.மு.க., அ.தி.மு.க.வும் பல்வேறு வியூகங்களை அமைத்து களமிறங்கி உள்ளன. கடந்த சட்டசபை தேர்தலில் கோவையில் 10 தொகுதிகளை இழந்த தி.மு.க. இம்முறை அதுபோல் நடந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. இதன்காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி பாராளுமன்ற தொகுதிகளின் மீது அதிக அக்கறை கொண்டுள்ளனர். அவர்களின் நேரடி பார்வையில் இந்த தொகுதிகளில் தேர்தல் பணியாற்ற வியூகம் அமைத்துள்ளனர்.

    கடந்த தேர்தலில் கோவை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தது. இந்த முறை கோவை தொகுதியை வென்று பலத்தை நிரூபிக்க வேண்டும் என கருதிய தி.மு.க. இங்கு தங்கள் கட்சியே போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்காக திண்டுக்கல் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கி கொடுத்துள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலை போலவே அத்தனை தொகுதிகளையும் வாரி சுருட்டி விட வேண்டும் என்ற திட்டத்தில் தி.மு.க. உள்ளது.

    அதேசமயம் கோவையில் 9 சட்டசபை தொகுதிகளை கைப்பற்றிய அ.தி.மு.க. அதனை தக்க வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் பல்வேறு வியூகங்களை அமைத்து களப்பணியில் இறங்கி உள்ளனர்.

    பா.ஜ.க., தி.மு.க. அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் சரியான வேட்பாளரை களமிறக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. மேலும் பூத் கமிட்டி உள்ளிட்ட அடிமட்ட தொண்டர்களையும் அ.தி.மு.க. உஷார்படுத்தி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் திராவிட கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் கொங்கு மண்டலத்தில் பா.ஜ.க. சாதிக்குமா? என்பது தேர்தலுக்கு பின்னர் தான் தெரியவரும்.

    Next Story
    ×