search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜி20 மாநாடு ஆலோசனை: எடப்பாடி பழனிசாமியை மத்திய அரசு அழைத்ததற்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு
    X

    ஜி20 மாநாடு ஆலோசனை: எடப்பாடி பழனிசாமியை மத்திய அரசு அழைத்ததற்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு

    • அ.தி.மு.க. தலைமை யார் என்பது தொடர்பாக பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
    • அ.தி.மு.க.வுக்கு நான்தான் ஒருங்கிணைப்பாளராக இருந்து வழி நடத்திக் கொண்டிருக்கிறேன் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.

    சென்னை:

    வளர்ந்த நாடுகளுக்கும், வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளுக்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஜி20 என்ற அமைப்பு உள்ளது. இந்தியா, அமெரிக்கா, சீனா உள்பட 19 நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

    உலகின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் 85 சதவீத பங்களிப்பை இந்த நாடுகள்தான் வழங்குகின்றன. இதனால் ஜி20 அமைப்பு சர்வதேச அளவில் அதிக சக்தி வாய்ந்த அமைப்பாக கருதப்படுகிறது.

    ஜி20 என்ற அமைப்பின் அடுத்த சர்வதேச மாநாட்டை டெல்லியில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9, 19-ந் தேதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஜி20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை ஏற்று இருப்பதால் அதை வெற்றிகரமாக நடத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    இந்த மாநாட்டுக்கு தயாராகும் வகையில் நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. அதற்கு முன்னதாக மாநாட்டு யுக்திகளை வரையறுப்பதற்காக 40 கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.

    தமிழகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். அ.தி.மு.க.வுக்கு தலைமை யார்? என்ற சர்ச்சை எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே நீடித்து வரும் நிலையில் ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட தால் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    மத்திய அரசு எடப்பாடி பழனிசாமிக்குத்தான் முதல் முன்னுரிமை கொடுத்து கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்தை பெற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரையை அனுப்பி வைக்கவே முதலில் திட்டமிட்டு இருந்தார். ஆனால் மத்திய அரசு தரப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. சார்பில் நேற்று நடந்த அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியை பா.ஜனதா மேலிடம் அங்கீகரித்து இருப்பதாக கருதப்படுகிறது.

    இது எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்து உள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வரும் நிலையில் மத்திய அரசும், பா.ஜனதா மேலிடமும் அங்கீகரித்து இருப்பதால் எடப்பாடி பழனிசாமியும் உற்சாகம் அடைந்து உள்ளார்.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். அ.தி.மு.க. முன்னாள் ஒருங்கிணைப்பாளரான அவர் இது தொடர்பாக பாராளுமன்ற விவகார அமைச்சர் பிரலகாத் ஜோஷிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் ஓ.பன்னீர்செல்வம் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. தலைமைக்கு சட்ட ரீதியாக நான்தான் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறேன். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இன்னமும் நான்தான் நீடிக்கிறேன். கடந்த டிசம்பர் மாதம் நடந்த கட்சி கூட்டத்தில் நான் போட்டியின்றி ஏக மனதாக அந்த பதவிக்கு தேர்வானேன்.

    இதுபற்றி தேர்தல் ஆணையத்துக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950-ன்படி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே அ.தி.மு.க. தலைமை பொறுப்பில் எடப்பாடி பழனிசாமி இல்லை என்பதை தங்களது மேலான கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். அ.தி.மு.க.வுக்கு நான்தான் ஒருங்கிணைப்பாளராக இருந்து வழி நடத்திக் கொண்டிருக்கிறேன் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.

    அ.தி.மு.க.வில் உள்ள சிலரது நடவடிக்கைகளால் கட்சி தலைமை தொடர்பாக சர்ச்சை உருவாகி உள்ளது. சிலர் ஒன்று சேர்ந்து எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் (தற்காலிக) பதவிக்கு தேர்வு செய்து இருப்பதாக சொல்கிறார்கள். அ.தி.மு.க.வின் சட்ட விதிகளுக்கு இது முழுக்க முழுக்க விரோதமானதாகும்.

    எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்திருப்பதை தலைமை தேர்தல் ஆணையம் இதுவரை அங்கீகரிக்கவில்லை என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். எனவே எதிர்காலத்தில் இத்தகைய தவறு நடக்காமல் மத்திய அரசு நடந்து கொள்ளும் என்று மனப்பூர்வமாக நான் நம்புகிறேன்.

    மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமியை இனியும் மத்திய அரசு அழைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    அ.தி.மு.க. தலைமை யார் என்பது தொடர்பாக பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளர் என்று அறிவித்திருப்பது துரதிருஷ்டமாகும்.

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு சிறிய அணிதான் இருக்கிறது. எனவே அவர்களை கருத்தில் கொள்ள வேண்டாம் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.

    ஆனால் ஓ.பன்னீர்செல்வம் கடிதத்தை மத்திய அரசு கண்டு கொண்டதாக தெரியவில்லை. இது தொடர்பாக இதுவரை ஓ.பன்னீர்செல்வத்துக்கு மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த பதில் கடிதமும் அனுப்பி வைக்கப்படவில்லை.

    இதனால் ஓ.பன்னீர் செல்வமும், அவரது ஆதரவாளர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×