search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாஜகவுடன் எக்காலத்திலும் கூட்டணி கிடையாது: மக்களிடத்தில் தெளிவாக சொல்லுமாறு அதிமுகவினருக்கு பழனிசாமி உத்தரவு
    X

    பாஜகவுடன் எக்காலத்திலும் கூட்டணி கிடையாது: மக்களிடத்தில் தெளிவாக சொல்லுமாறு அதிமுகவினருக்கு பழனிசாமி உத்தரவு

    • பாரதிய ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க. மீண்டும் கூட்டு சேர்ந்து விடும் என்கிற பொய்யான தகவலை திட்டமிட்டே பரப்புகிறார்கள்.
    • பாராளுமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகளையும் சேர்த்துக்கொண்டு மிகப்பெரிய கூட்டணியை நிச்சயம் நான் அமைப்பேன்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக்கழகத்தில் அ.தி.மு.க.வின் 52-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. அ.தி.மு.க. பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகளுடன் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வில் உள்ள 82 மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். பூத் கமிட்டிகளை பலப்படுத்துவது, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அமைப்புகளில் துடிப்பான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை நியமிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ள நிலையில் அவர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    பாராளுமன்ற தேர்தலுக்கு கட்சியினர் அனைவரும் இப்போதே தயாராக வேண்டும். இதையொட்டி வாக்குச்சாவடி வாரியாக அமைக்கப்படும் பூத் கமிட்டிகளை பலப்படுத்த வேண்டும். இந்த கமிட்டியில் அ.தி.மு.க. ஐ.டி. பிரிவை சேர்ந்த 2 நிர்வாகிகள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும்.

    இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்களையும் இடம்பெறச் செய்ய வேண்டும். இப்படி திறமையான நபர்கள் 19 பேரை நியமிக்க வேண்டும். 18 முதல் 25 வயது வரையிலான நபர்களையே இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் சேர்க்க வேண்டும். அ.தி.மு.க. மகளிர் அணியில் 45 வயதுக்குட்பட்ட பெண்களையே சேர்க்க வேண்டும். இந்த அமைப்புகளில் குறைந்தபட்சம் 25 பெண்களை கண்டிப்பாக சேர்க்க வேண்டும். அதிகபட்சமாக எத்தனை பேரை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.

    பாரதிய ஜனதா கட்சியுடன் இனி கூட்டணியே வேண்டாம் என்று முடிவெடுத்து நாம் வெளியேறி இருக்கிறோம். அம்மாவின் வழியில் இந்த முடிவை நான் எடுத்திருக்கிறேன். இனி எந்த காலத்திலும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி கிடையாது என்பதில் நான் உறுதியுடன் உள்ளேன். இதனை தி.மு.க. தலைவர் ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

    இதனாலேயே சிறுபான்மையினர் மீது அ.தி.மு.க.வுக்கு திடீர் பாசம் ஏன்? என கேட்டு தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார்.

    பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து நாம் வெளியேறிய பிறகு சிறுபான்மை கட்சிகள் நம்மை நாடி வந்து கொண்டிருக்கின்றன. அ.தி.மு.க. எடுத்துள்ள இந்த முடிவை அவர்கள் பாராட்டி உள்ளனர். இதனை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பொய்யான தகவலை பரப்புகிறார்கள்.

    பாரதிய ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க. மீண்டும் கூட்டு சேர்ந்து விடும் என்கிற பொய்யான தகவலை திட்டமிட்டே பரப்புகிறார்கள். இந்த நேரத்தில் உங்களிடம் ஒன்றை உறுதியாக கூறிக் கொள்கிறேன். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் மட்டுமின்றி, 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்பதை திட்டவட்டமாக கூறிக் கொள்கிறேன்.

    எனவே மக்கள் மத்தியில் சென்று பேசும்போது இதனை நீங்கள் ஆணித்தரமாக எடுத்துக் சொல்லுங்கள். பாரதிய ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க. இனி எக்காலத்திலும் கூட்டணி வைக்காது என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். இதன் மூலமாக கூட்டணி விவகாரத்தில் தி.மு.க. மேற்கொள்ளும் பொய் பிரசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

    பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்திருந்ததால் சிறுபான்மை மக்கள் நம்மை ஆதரிக்காமல் விலகியே இருந்தனர். அவர்களின் வாக்குகளை பெறுவதற்கு பாரதிய ஜனதாவுடனான கூட்டணி நமக்கு தடையாக இருந்தது.

    ஆனால் தற்போது அந்த தடை விலகி உள்ளது. இதனால் சிறுபான்மை கட்சிகள் நம்மோடு கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வத்தோடு உள்ளனர். இதன்படி பாராளுமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகளையும் சேர்த்துக்கொண்டு மிகப்பெரிய கூட்டணியை நிச்சயம் நான் அமைப்பேன்.

    எனவே அதுபற்றியெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதற்கு முன்னதாக கட்சியை வெற்றிப் பாதைக்கு நீங்கள் அழைத்து செல்ல வேண்டும். அப்போதுதான் பாராளுமன்ற தேர்தலில் நாம் அதிக இடங்களில் வெற்றி பெற முடியும்.

    பிரதமர் வேட்பாளர் யார் என்பதை சொல்லாமலேயே தமிழக மக்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி நாம் தேர்தலை சந்திப்போம். தி.மு.க. ஆட்சியின் மீது தமிழக மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். இதனை பயன்படுத்தி வெற்றி பெறுவதற்காக நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் நாம் பெறப்போகும் வெற்றி 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்க வேண்டும். இதனை மனதில் வைத்து பணியாற்றுங்கள். நிச்சயம் நம்மால் 2026-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர முடியும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    Next Story
    ×