search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிரதமர் மோடியை குறை சொல்வதையே மு.க.ஸ்டாலின் முழு நேர வேலையாக கொண்டுள்ளார்- அண்ணாமலை
    X

    பிரதமர் மோடியை குறை சொல்வதையே மு.க.ஸ்டாலின் முழு நேர வேலையாக கொண்டுள்ளார்- அண்ணாமலை

    • கொட்டாரம் ராமர் கோவில் முன்பு அண்ணாமலைக்கு பாரதிய ஜனதாவினர் அகல் விளக்கு ஏற்றி வைத்து பூரணகும்பமரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.
    • குமரி மாவட்டத்தில் என் நடை பயணத்தின்போது 25-க்கும் மேற்பட்ட பைபிள், 6-ல் இருந்து 8 குரான் ஆகியவற்றை கொடுத்துள்ளார்கள்.

    கன்னியாகுமரி:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த மாதம் 28-ந்தேதி அவர் தனது பாதயாத்திரையை தொடங்கினார். சட்டமன்ற தொகுதி வாரியாக பாத யாத்திரை மேற்கொண்டு வரும் அண்ணாமலை குமரி மாவட்டத்தில் கடந்த 15-ந்தேதி விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட களியக்காவிளையில் இருந்து தனது பாத யாத்திரையை தொடங்கினார். 3 நாட்கள் குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பாத யாத்திரை மேற்கொண்ட அவர், இறுதியாக கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரையில் இருந்து நேற்று மாலை 6 மணிக்கு தனது பாதயாத்திரையை தொடங்கினார்.

    அவருக்கு வழி நெடுகிலும் பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட பாதயாத்திரை காந்தி மண்டப சந்திப்பு, பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு, ரெயில் நிலைய சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமார்த்த லிங்கபுரம், மகாதானபுரம் நான்கு வழி சாலை ரவுண்டானா சந்திப்பு, பெருமாள்புரம் வழியாக இரவு 7.30 மணிக்கு கொட்டாரம் சந்திப்பை வந்தடைந்தது. கொட்டாரம் ராமர் கோவில் முன்பு அண்ணாமலைக்கு பாரதிய ஜனதாவினர் அகல் விளக்கு ஏற்றி வைத்து பூரணகும்பமரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அண்ணாமலை கொட்டாரம் சந்திப்பில் நிறுத்தி வைத்து இருந்த ரதத்தில் வடிவமைக்கப்பட்டு இருந்த பிரதமர் மோடியின் முழு உருவ சிலை முன்பு நின்று வணங்கி தனது பாத யாத்திரையை நிறைவு செய்தார். மொத்தம் 6 கிலோ மீட்டர் தூரம் அவர் தொண்டர்கள் புடை சூழ நடந்தே வந்தார். அண்ணாமலை தனது குமரி மாவட்ட பாதயாத்திரை நிகழ்ச்சியை கொட்டாரம் சந்திப்பில் நிறைவு செய்து வைத்து திறந்த வேனில் நின்றபடி பேசினார்.

    குமரி மாவட்டம் பழமையும் பெருமையும் மிக்க மாவட்டமாகும். இந்த மாவட்டம் காமராஜரை எம்.பி.யாக உருவாக்கிய மாவட்டம். சிதம்பரநாதன் நாடார், ஜீவானந்தம், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மகாதேவன் பிள்ளை தேரூர் சிவன் பிள்ளை போன்றவர்களை இந்த நாட்டுக்கு அர்ப்பணித்த மாவட்டம். மேலும் மேற்கு தொடர்ச்சி மலையின் தென்கோடியில் அமைந்து உள்ள மருந்து வாழ்மலையில் அய்யா வைகுண்டர், நாராயண குரு போன்ற மகான்கள் தவமிருந்து முக்தி பெற்ற இடமாகும்.

    அதேபோல சுவாமி விவேகானந்தர் இதே கன்னியாகுமரி கடலில் உள்ள பாறையில் தன்னம்பிக்கையுடன் வேண்டி சென்று தவம் இருந்து ஞானம் பெற்றவர். அப்படிப்பட்டவர்களை இந்த தி.மு.க. அரசு பாடப் புத்தகங்களில் இடம் பெற செய்யாமல் மறந்துவிட்டது. மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தை அரசியலுக்காக மத ரீதியாகவும் ஜாதி ரீதியாகவும் பிரித்து வைத்து உள்ளனர். நெல்லை எங்களது எல்லை குமரி எங்களுக்கு தொல்லை என்று சொன்ன தி.மு.க.வினருக்கு, குமரி மாவட்டம் வரும் காலங்களில் என்றைக்கும் தி.மு.க.வுக்கு ஒரு தொல்லையாகவே அமையும். பிரதமர் மோடியை திட்டுவதையே முழு நேர வேலையாக கொண்டிருக்கிறார் மு.க. ஸ்டாலின்.

    மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் கடலில் கால் வைத்தால் இழுக்கு என்று நினைக்கிறார். இதனால் தான் ஆய்வுக்கு சென்ற அவரை மீனவர் ஒருவர் இடுப்பில் தூக்கி வந்து கரையில் விட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது பணக்காரர் மீன்வளத்துறை அமைச்சர் தான். அவரிடம் 4 ஆயிரத்து 999 கோடி ரூபாய் உள்ளது.

    குமரி மாவட்டத்தில் என் நடை பயணத்தின்போது 25-க்கும் மேற்பட்ட பைபிள், 6-ல் இருந்து 8 குரான் ஆகியவற்றை கொடுத்துள்ளார்கள். பத்மநாபபுரம் தொகுதியில் நடைபயணம் சென்றபோது ஆலயத்தில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்த கிறிஸ்தவர்கள் வந்து வாழ்த்து தெரிவித்தனர். குமரி சங்கமம் நிகழ்ச்சிக்கு வந்தபோது ஜெபமாலை கொடுத்தார்கள். அதை நான் பூஜை அறையில் வைத்து பூஜை செய்து வருகிறேன். இது தான் இந்துத்துவா.

    பிரதமர் மோடிக்கு 13 நாடுகள் உச்சபட்ச கவுரமான விருதுகளை கொடுத்துள்ளது. அதில் 7 நாடுகள் இஸ்லாமிய நாடுகள் ஆகும். எனவே என் நடை பயணத்தின் போது ஆலயம் அருகே கொடி கட்டாதீர்கள் என்றும், பேனர் வைக்காதீர்கள் என்றும் பேசாதீர்கள். காற்று அடிக்கும்போது எச்சில் இலை கோபுரத்தின் உச்சிக்கு சென்றிருக்கலாம். எனவே எச்சில் இலைக்கு போலீசார் சல்யூட் அடிக்க தேவையில்லை. காட்சிகள் மாறும், காலங்கள் மாறும். காற்று மாற்றி வீசும் போது எச்சில் இலை தெருவில் கிடக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. குமரி மாவட்ட பா.ஜ.க. தலைவர் தர்மராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×