search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
    X

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    • தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல-இந்திய நாட்டின் அனைத்து மக்களுக்கும் எனது விடுதலை நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • இந்திய நாட்டின் தியாகிகளைப் போற்றிப் பாராட்டுவதில் திராவிட முன்னேற்றக்கழக அரசு யாருக்கும் சளைத்தது அல்ல.

    சென்னை:

    இந்தியாவின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று தேசிய கொடி ஏற்றி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    டெல்லியில் பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றினார். அது போல மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் தேசிய கொடி ஏற்றினார்கள்.

    தமிழகத்தில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றி உரையாற்றினார். அவர் பேச்சு விவரம் வருமாறு:-

    நமது இந்திய நாடு, ஆங்கிலேயரின் காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்றதன் 75-வது ஆண்டு நிறைவு விழாவை நாம் இப்போது கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

    எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் பெற்ற விடுதலை இது!

    நமது வரலாறு எத்தனையோ தியாகிகளை-போராளிகளைக் கண்டிருக்கிறது!

    அத்தனை நெருப்பாறுகளையும் அகிம்சையால் கடந்த வரலாறு நம்முடையது!

    அதனால்தான் உலக அரங்கில் நாம் நெஞ்சு நிமிர்த்தி 'இந்தியர்கள்' என்று பெருமையோடு சொல்கிறோம்!

    இந்தப் பெருமை என்பது, 'அகிம்சைப் பாதை' என்னும் அறவழியை நமக்குக் காட்டிய 'தேசத்தந்தை' அண்ணல் காந்தியடிகளையே சாரும்!

    அதனால்தான் முதலில் நாட்டு விடுதலைக்காகவும்-பின்னர் சமூக விடுதலைக்காகவும் போராடிய தந்தை பெரியார், மகாத்மா காந்தி மதவெறியர்களால் சுட்டுக்கொல்லப்பட்டபோது, இந்த நாட்டிற்கு 'காந்தி தேசம்' என்று பெயரிட வேண்டும் என்று கூறினார்.

    இன்று விடுதலை நாளில், நமது தேசியக்கொடியை ஏற்றும்போது, இந்த வரலாற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கிறேன்.

    அதேபோல், இந்திய ஒன்றியத்தில் உள்ள மாநில முதல்-அமைச்சர்கள் அனைவருக்கும் தேசிய கொடி ஏற்றுகின்ற உரிமையைப் பெற்றுத்தந்த முத்தமிழறிஞர் கலைஞரையும் இந்த நேரத்தில் நினைவு கூர்கிறேன்.

    பட்டொளி வீசிப் பறக்கும் மூவண்ணக் கொடிக்கு முதல் வணக்கம்!

    இன்று நம் முன் பறக்கும் இந்தக்கொடியை, 1947-ம் ஆண்டு ஜூலை மாதம் அரசியல் நிர்ணய அவையில், உணர்ச்சிகரமான ஓர் உரையை ஆற்றி, தீர்மானமாக முன்மொழிந்தவர் பண்டிதர் நேரு அவர்கள். அப்படித்தான் இம் மூவண்ணக்கொடி தேசியக்கொடி ஆனது.

    அதேபோல, இந்தியா விடுதலை அடைந்த அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நள்ளிரவுப் பொழுதில், பாராளுமன்றத்தில் அரசியல் நிர்ணய அவையின் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத்திடம், இந்திய நாட்டின் பெண்கள் அனைவரின் சார்பாகவும் முதல் கொடியை வழங்கியவர் ஹன்ச மேத்தா! விடுதலை இந்தியாவின் முதல் கொடியை ஒரு பெண்மணிதான் வழங்கினார்.

    அத்தகைய மூவண்ணக்கொடியை வணங்குவதன் மூலமாக நாட்டை வணங்குகிறோம். நாட்டு மக்களை வணங்குகிறோம். நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றும் ஒருமைப்பாட்டு விழுமியங்களை வணங்குகிறோம்.

    மூவண்ணக் கொடிக்கு முன்பு-அணி அணியாக அணிவகுத்து நிற்கும் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.

    75 ஆண்டுகளாக விடுதலைக் காற்றை சுவாசிக்கக் காரணமாக அமைந்த வீரத்தியாகிகள் அனைவருக்கும் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்தகைய தியாகிகளை ஈந்த அவர்தம் குடும்பத்தினர் வாழும் திசை நோக்கி வணங்குகிறேன்.

    தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல-இந்திய நாட்டின் அனைத்து மக்களுக்கும் எனது விடுதலை நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மற்றுமொரு மகிழ்ச்சியான அறிவிப்பையும் இந்த இனிய தருணத்தில் வெளியிட விரும்புகிறேன்.

    ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக, மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1-7-2022 முதல் அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதன் மூலம், 16 லட்சம் பேர் பயன்பெறுவர். அரசுக்கு ஆண்டுக்கு 1,947 கோடியே 60 லட்சம் ரூபாய் கூடுதலாகச் செலவாகும்.

    இந்திய நாட்டின் தியாகிகளைப் போற்றிப் பாராட்டுவதில் திராவிட முன்னேற்றக்கழக அரசு யாருக்கும் சளைத்தது அல்ல.

    இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    Next Story
    ×