search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காயல்பட்டினத்தில் திருமணம் முடிந்த கையோடு கல்லூரிக்கு சென்று தேர்வு எழுதிய மணப்பெண்
    X

    காயல்பட்டினத்தில் திருமணம் முடிந்த கையோடு கல்லூரிக்கு சென்று தேர்வு எழுதிய மணப்பெண்

    • திருமண நாளாக இருந்தாலும் எப்படியாவது தேர்வு எழுதி விட வேண்டும் என்று அனிதா முடிவு செய்தார்.
    • திருமண நாளும் நெருங்கிவிட்ட நிலையில் தனது விருப்பத்தை வருங்கால கணவரிடம் தயங்கியபடி அனிதா தெரிவித்துள்ளார்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ஓடக்கரையை சேர்ந்தவர் செல்வராஜ். காய்கறி வியாபாரியான இவருக்கு இசக்கிராணி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இருவரும் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

    இதனிடையே மூத்த மகளான அனிதாவுக்கும் கட்டாலங்குறிச்சியை சேர்ந்த யோசேப்பு மகன் சாமுவேல் கில்டன் என்பவருக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நிச்சயக்கப்பட்டது. பி.ஏ. தமிழ்த்துறை 3-ம் ஆண்டு படித்து வந்த அனிதா தேர்வை எதிர்நோக்கி இருந்தார். திருமண நாளான 25-ந்தேதி (நேற்று) அவருக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது.

    ஏனென்றால் அதே நாளில் தான் அவருக்கான கல்லூரி தேர்வும் நடப்பதாக இருந்தது. படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட அனிதா முந்தைய தேர்வுகளில் எல்லாம் முதலிடத்தை பிடித்து வந்துள்ளார். திருமண நாளாக இருந்தாலும் எப்படியாவது தேர்வு எழுதி விட வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.

    இதனை தனது பெற்றோரிடம் தெரிவித்த போதிலும், தனது எண்ணம் ஈடேறுமா என்று தவித்த நிலையில் இருந்து வந்துள்ளார். இதனிடையே திருமண நாளும் நெருங்கிவிட்ட நிலையில் தனது விருப்பத்தை வருங்கால கணவரிடம் தயங்கியபடி தெரிவித்துள்ளார்.

    இதனை கேட்ட மணமகன் உடனடியாக அனிதாவின் விருப்பத்திற்கு பச்சைக்கொடி காட்டி உள்ளார். இந்நிலையில் நேற்று காலையில் இவர்கள் இருவருக்கும் காயல்பட்டினத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடித்த கையோடு மணமக்கள் இருவரும் காரில் கல்லூரிக்கு சென்றனர். குறித்த நேரத்தில் அனிதா தேர்வை எழுதினார். அவரை கல்லூரியின் பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

    Next Story
    ×