search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இரட்டை இலை வெற்றி பெறாது என்பதா?- டி.டி.வி.தினகரனுக்கு ஜெயக்குமார் கண்டனம்
    X

    இரட்டை இலை வெற்றி பெறாது என்பதா?- டி.டி.வி.தினகரனுக்கு ஜெயக்குமார் கண்டனம்

    • தி.மு.க. கூட்டங்களுக்கு 2 அல்லது 3 லட்சம் ரூபாய் செலவழிகிறது என்றால், கடை வைத்திருப்பவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் வசூலிக்கப்படுகிறது.
    • காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    சென்னை:

    தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் குறிப்பாக ஜெயலலிதா ஆட்சி காலத்தில் செய்த நல்ல திட்டங்கள், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது, அடிப்படை கட்டமைப்பு வசதியும் இருந்தது. அது மட்டும் அல்லாமல் சமூகநீதிக்கான அரசாகவும் செயல்பட்டது. இவற்றை எல்லாம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் மக்களிடம் எடுத்துச் சொல்லுவோம்.

    ஆனால், தற்போது தாலிக்கு தங்கம் திட்டம் இல்லாதபோது, அது என்ன திராவிட மாடல் அரசு?, என்ன சமூகநீதி அரசு?. எனவே தி.மு.க. அரசு சமூகநீதிக்கு புறம்பாகவும், திராவிடத்துக்கு எதிராகவும் இருக்கிறது. இதை மக்கள் முன்பு தெரிவிப்போம். கஞ்சா கடத்தல், அடாவடித்தனம், அராஜகம், அட்டூழியம் என சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளும் தலைவிரித்தாடுகிறது.

    தி.மு.க. கூட்டங்களுக்கு 2 அல்லது 3 லட்சம் ரூபாய் செலவழிகிறது என்றால், கடை வைத்திருப்பவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் வசூலிக்கப்படுகிறது. கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல், கொலை-கொள்ளைகள் தமிழகத்தில் அரங்கேறி வருகிறது. இதனை மக்கள் உணர்கிறார்கள்.

    விலைவாசி உயர்வு, தேர்தல் நேரத்தில் மகளிருக்கு ரூ.1,000 கொடுப்பதாக கூறியது இன்னும் வழங்கப்படவில்லை. கியாஸ் மானியம் கொடுப்பதாக கூறி அதையும் வழங்கவில்லை. கல்விக் கடன் ரத்து செய்யப்படவில்லை. நகைக்கடன் ரத்து செய்யப்படவில்லை. நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படவில்லை. காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    ஜெயலலிதா ஆட்சியில் ஸ்காட்லாந்து போலீசாருக்கு இணையாக இருந்த தமிழக போலீசார் இன்று கூனி குறுகி நிற்கிறார்கள். ஒரு துக்ளக் அரசாங்கம் தமிழகத்தை ஆண்டு வருகிறது. இவற்றை எல்லாம் மக்களிடம் எடுத்து கூறுவோம். இதனை மக்கள் உணர்வார்கள். நிச்சயமாக எங்கள் கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும்.

    எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. எம்.ஜி.ஆரின் ஆசி, ஜெயலலிதாவின் ஆசி, தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவு, கூட்டணி கட்சிகளின் ஆதரவு இவை எல்லாம் சேர்ந்து மகத்தான வெற்றியை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பெறுவோம். பண நாயகத்தைவிட ஜனநாயகம் வலிமையானது. அவர்கள் (தி.மு.க. கூட்டணி) நம்புவது பண நாயகம், நாங்கள் நம்புவது ஜனநாயகம் எனவே கண்டிப்பாக நாங்கள் ஜெயிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதைத்தொடர்ந்து, இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்டதால் வெற்றி பெற முடியாது என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்து உள்ளாரே என்ற கேட்டதற்கு, 'டி.டி.வி.தினகரன் முதலில் வாய்க்காலில் தாண்ட வேண்டும். அப்புறம் கடலில் தாண்ட ஆசைப்பட வேண்டும். வாய்க்காலை தாண்ட வக்கில்லாதவர்கள் எங்களை பற்றி பேசக்கூடாது' என்று பதில் அளித்தார்.

    Next Story
    ×