search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வடபெரும்பாக்கம்-விளாங்காடுப்பாக்கத்தில் வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்: 4-வது நாளாக மக்கள் கடும் அவதி
    X

    வடபெரும்பாக்கம்-விளாங்காடுப்பாக்கத்தில் வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்: 4-வது நாளாக மக்கள் கடும் அவதி

    • வடபெரும்பாக்கம் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
    • கால்வாயை முறையாக பராமரிக்காததே இதற்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் கடந்த 29-ந்தேதி கொட்டி தீர்த்த கன மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. இதையடுத்து அதிகாரிகள் பம்பரமாக சுழன்று மழை நீர் தேங்கிய இடங்களில் தண்ணீரை வடிய வைப்பதற்கான பணிகளை முடுக்கிவிட்டனர்.

    இதையடுத்து பல இடங்களில் தண்ணீர் வடிந்துள்ளது. இருப்பினும் சென்னை மாநகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக கோடம்பாக்கம், மாதவரம் மஞ்சம்பாக்கத்தை அடுத்த வடபெரும்பாக்கம், புழல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட விளாங்காடுப்பாக்கம் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் தேங்கிய மழை நீர் இன்னும் வடியாமலேய உள்ளது.

    கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியில் நேற்று மாலை வரையில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி நின்றது. ரங்கராஜாபுரம் மெயின் ரோடு, ஆசாத் நகர் உள்ளிட்ட இடங்களிலும் தேங்கிய மழைநீர் வடிந்துள்ளன.

    மாதவரம் மஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள வடபெரும்பாக்கத்தில் குடியிருப்பு பகுதிகளை புழல் ஏரி நீர் தண்ணீர் அதிக அளவில் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் இன்று 4-வது நாளாக தவித்து வருகிறார்கள்.

    மாதவரத்தில் இருந்து வடபெரும்பாக்கம், வடகரை, விளாங்கால்பாக்கம், செங்குன்றம், ஞாயிறு உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கு வடபெரும்பாக்கத்தில் உள்ள பிரதான சாலையைத்தான் அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சாலையில் மழை நீர் வடிகால் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சிக் குட்பட்ட இந்த பகுதியில் 4 நாட்களாக அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வடபெரும்பாக்கம் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஆந்திரா நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலை வழியாக திருப்பிவிடப்பட்டு உள்ளன.

    வட பெரும்பாக்கம் வி.எஸ்.மணி நகர் அதனை சுற்றியுள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதப்பதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். வட பெரும்பாக்கம் பகுதியில் தனியார் ஆம்னி பஸ் நிறுத்தங்கள் 2 இடங்களில் உள்ளன. குறிப்பிடப்பட்ட 2 நிறுவனங்களை சேர்ந்த பஸ்கள் அங்கு நிறுத்தப்படுவது வழக்கம்.

    இந்த பஸ்களும் வட பெரும்பாக்கம் சாலையில் செல்ல முடியாமல் புழல் காவாங்கரை, வடகரை வழியாக வட பெரும்பாக்கத்தை சென்றடைந்தன.

    புழல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட விளாங்காடுப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் 4-வது நாளாக குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. விளாங்காடுப்பாக்கம் ஊருக்குள்ளும் புதிதாக அங்கு தோன்றியுள்ள மல்லிகா கார்டன் மற்றும் அதன் அருகில் உள்ள நியூஸ்டார் சிட்டி குடியிருப்பு தர்காஸ் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் அதிக அளவில் தேங்கியுள்ளது.

    விளாங்காடுப்பாக்கம் கல்மேடு நியூஸ்டார் சிட்டியில் தொடை அளவுக்கு தேங்கி நின்ற தண்ணீர் தற்போதுதான் முட்டியளவுக்கு குறைந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள கால்வாயை முறையாக பராமரிக்காததே இதற்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    செங்குன்றம் பகுதியில் இருந்து வரும் நீளமான இந்த கால்வாயை முறையாக தூர்வாரி முன்கூட்டியே கரைகளை பலப்படுத்தி இருந்தால் தண்ணீர் தேங்கி இருக்காது என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் இதுபோன்று சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

    எனவே அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு மழை பாதிப்பை சரிசெய்ய வேண்டும் என்றும், புழல் ஊராட்சி ஒன்றிய அதிகாரி களுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டம் புழல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள விளாங்காடு பாக்கம் வடகரை கிராண்ட்லைன் ஆகிய ஊராட்சிகளில் புதிய கால்வாய் வசதி இல்லாததாலும் ஏற்கனவே இருக்கும் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாலும் தற்போது பெய்து வரும் மழையில் நீர் வடியாமல் குடியிருப்புகளில் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். விளாங்காடு பக்கம் ஊராட்சியில் உள்ள தர்காஸ் கண்ணம்பாளையம் சிங்கிலி மேடு நியூ ஸ்டார் சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது இதே போல் தீர்த்தங்கரையும் பட்டு ஊராட்சியில் உள்ள குமரன் நகர் சன்சிட்டி கிரானைட் ஊராட்சியில் உள்ள உதயசூரியன் நகர் கிரானைட் வடகரை பகுதியில் உள்ள பாபா நகர் வடகரை ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்த பகுதிகளில் மழை நீர் செல்வதற்கு கால்வாய்கள் இருந்து வந்தன. இந்த கால்வாய்களை தனியார் சிலர் ஆக்கிரமித்தும் வீட்டு மனை விற்பனை செய்ப வர்கள் கால்வாய்களை ஆக்கிரமித்தும் உள்ளதால் மழைநீர் வெளியேறாமல் இருந்து வருகிறது.

    இந்த மழை நீரை வெளி யேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து ஏற்கனவே இருந்த மழைநீர் கால்வாய்களை ஆக்கிரமித்து இருப்பவர்களிடம் இருந்து மீட்டு சீரான கால்வாய் வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×