search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வயதானோர், குழந்தைகள் பொது இடங்களில் முககவசம் அணிய வேண்டும்
    X

    வயதானோர், குழந்தைகள் பொது இடங்களில் முககவசம் அணிய வேண்டும்

    • இதுவரை 26 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு 23 ஜே.என்.1.1 வகை கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
    • வடகிழக்கு பருவமழையையொட்டி 26 ஆயிரத்து 837 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 12.28 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் நேற்று ரூ.27.96 கோடி மதிப்பீட்டில் காசநோயைக் கண்டறிய அதிநவீன விரைவு மூலக்கூறு கண்டறியும் கருவிகள், இந்தியன் ஆயில் கார்பரேஷன் (ஐ.ஓ.சி.எல்.) நிறுவனத்தின் பெரு நிறுவன கூட்டு சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து (சி.எஸ்.ஆர்.) வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி வருமாறு:-

    2025-ம் ஆண்டிற்குள் காசநோய் இல்லா தமிழ்நாடு என்ற இலக்கை அடையும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஓராண்டு முழுவதும் 20 லட்சம் சளி பரிசோதனைகள் செய்யப்பட்டு இதுவரை தமிழ்நாட்டில் 97 ஆயிரம் காசநோயாளிகள் கண்டறியப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதோடு, 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உதவியுடன் ஊட்டச்சத்து மருந்துகள் தரப்படுகிறது.

    தற்போது ஐ.ஓ.சி.எல். நிறுவனத்துடன் செய்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, காசநோய் மூலக்கூறு கண்டறியும் கருவிகளை வாங்கும்போது 272 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காசநோய் கண்டறியும் செயல்பாடுகள் அதிகரிக்கும்.

    கொரோனா பாதிப்பு 20 என்ற எண்ணிக்கையில் மட்டும்தான் இருக்கிறது. நேற்று 25 என்றளவில் இருந்தது. அதில் சென்னையில் 15 பாதிப்பு காணப்பட்டது. உருமாறிய ஜே.என்.1 கொரோனா வைரசஸ் உலகளவில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சிங்கப்பூரில் ஆயிரம் என்றளவில் கொரோனா பரவியிருந்தது. 5-வது டோஸ் தடுப்பூசி வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதுபற்றி சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவர்களுடன் தொடர்ந்து பேசுகிறோம். இந்தியாவில் அதற்கான அவசியம் தற்போது எழவில்லை என்று மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை கூறியுள்ளது.

    வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிகள், சிறு குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், இணை நோய் உள்ளவர்கள் பொதுவான இடங்களுக்கு செல்லும்போது முககவசம் அணிவது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்று மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறையும், உலக சுகாதார நிறுவனமும் அறிவுறுத்தியுள்ளன.

    இதுவரை 26 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு 23 ஜே.என்.1.1 வகை கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குழு பாதிப்பு எங்கும் ஏற்படவில்லை.

    வலிநிவாரண மருந்து பயன்பாட்டை தடுக்க முடியாது. மருந்தகங்கள் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை வழங்கினால், 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மூலம் குட்கா, பான்மசாலா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் கண்டறியப்பட்டு 1000-க்கும் மேற்பட்ட கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

    வடகிழக்கு பருவமழையையொட்டி 26 ஆயிரத்து 837 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 12.28 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். மிச்சாங் புயலினால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் 13ஆயிரத்து482 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 7.95 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

    தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழையினால் 7,892 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 48 ஆயிரத்து 604 பேர் பயனடைந்துள்ளனர். ஆக மொத்தம் கடந்த 2 மாதங்களாக 24.13 லட்சம் பேர் மருத்துவ முகாம்களின் மூலம் பயனடைந்துள்ளனர். இதன் மூலம் மழைக்கால நோய்களின் தாக்கம் குறைக்கப்பட்டுள்ளது. 40 லட்சம் குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. மிச்சாங் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும், மருத்துவ கட்டமைப்புகளை சரிசெய்வதற்கு ரூ.49 கோடி தொகை மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×