என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பெரம்பலூரில் புதிய காலணி தொழிற்சாலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- முதலீட்டாளர்களின் முதல் தேர்வு தமிழ்நாடு.
- தமிழ்நாடு காலணி மற்றும் தோல்பொருட்கள் கொள்கை-2022-ஐ கடந்த ஆண்டு வெளியிட்டோம்.
சென்னை:
பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய காலணி தொழிற்சாலையை சென்னையில் இருந்தபடி காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
2022 நவ.28ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய நிலையில், ஓராண்டில் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. ரூ.400 கோடி முதலீட்டில் அமையப் பெற்றுள்ள காலணி தொழிற்சாலை மூலம் 4000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
2028ம் ஆண்டிற்குள் ரூ.2440 கோடி முதலீட்டில் 29,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
காலணி தொழிற்சாலையை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ஓராண்டில் தொடக்க விழா நடத்துவதில் கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது. முதலீட்டாளர்களின் முதல் தேர்வு தமிழ்நாடு. பின்தங்கிய மாவட்டங்களில் முதலீடுகளை ஈர்ப்பதில் அரசு முயற்சி எடுத்து வருகிறது.
வளர்ச்சி திட்டங்கள், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் உறுதியாக இருக்கிறோம். 1 டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கை விரைவில் அடைவோம்.
தமிழ்நாடு காலணி மற்றும் தோல்பொருட்கள் கொள்கை-2022-ஐ கடந்த ஆண்டு வெளியிட்டோம். காலணி தொழிற்சாலையால் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகளவில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.






