search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காங்கிரசை தாங்கிப் பிடிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    காங்கிரசை தாங்கிப் பிடிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • காங்கிரசை உள்ளடக்கிய தேசிய கூட்டணியை உருவாக்குவதன் மூலம் மட்டும்தான் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க முடியும்.
    • பாரதிய ஜனதாவின் மத அரசியலுக்கு சரியான மாற்றாக ராகுல்காந்திதான் இருக்க முடியும் என்று முதலமைச்சர் குறிப்பிட்டு உள்ளார்.

    சென்னை:

    அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி மீண்டும் பலம் பெறுமா என்ற எதிர்பார்ப்பும், கேள்விக்குறியும் எல்லோர் மனதிலும் உள்ளது. ராகுல்காந்தி நடத்தும் பாத யாத்திரையும், அருணாச்சல பிரதேசத்தில் கிடைத்துள்ள வெற்றியும் காங்கிரசை வளர்க்க போதாது என்றே கருதப்படுகிறது.

    காங்கிரசுக்கு பல்வேறு மாநிலங்களிலும் தனி செல்வாக்கு பெற்ற மாநில கட்சிகளின் ஆதரவு கிடைப்பது நிச்சயமற்ற நிலையில் உள்ளது. ஆனால் ஒட்டு மொத்த இந்தியாவிலும் காங்கிரசை தாங்கி பிடிக்கும் முதன்மையான தலைவராக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்.

    சமீபத்தில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்தியாவின் பழமை வாய்ந்த காங்கிரஸ் தேசிய அளவில் தன் முக்கியத்துவத்தை இழந்துவிடவில்லை. காங்கிரசை உள்ளடக்கிய தேசிய கூட்டணியை உருவாக்குவதன் மூலம் மட்டும்தான் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க முடியும்" என்று பேசினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சு தமிழக காங்கிரசார் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அகில இந்திய அளவில் விரைவில் காங்கிரசை உள்ளடக்கிய தேசிய கூட்டணியை அமைக்க வேண்டும். தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி உள்ளது. அதே போன்று தேசிய அளவில் கூட்டணி அமைந்தால்தான் பாரதிய ஜனதாவை விரட்ட முடியும்" என்று தெரிவித்தார்.

    மேலும் ராகுல்காந்தியையும் அவர் புகழ்ந்து உள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், "ராகுல் காந்தியின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. அவர் நாடு முழுவதும் உள்ள வெறுப்பு அரசியலை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார். அவரது வாதங்கள், அணுகுமுறைகள் தெளிவாக உள்ளன. இதன் மூலம் நாட்டின் ஒருமைபாட்டை பாதுகாக்க முடியும்" என்று கூறி உள்ளார்.

    இது தவிர முதலமைச்சர் தனது பேட்டியில் பாரதிய ஜனதாவின் மத அரசியலுக்கு சரியான மாற்றாக ராகுல்காந்திதான் இருக்க முடியும் என்றும் குறிப்பிட்டு உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த பேட்டி டெல்லியில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்களை நெகிழ வைத்து உள்ளது.

    Next Story
    ×