search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எம்.ஜி.ஆர். வழியில் அரசியல்... கருணாநிதி தலைமையில் திருமணம்... விஜயகாந்தின் போராட்ட வாழ்க்கை
    X

    எம்.ஜி.ஆர். வழியில் அரசியல்... கருணாநிதி தலைமையில் திருமணம்... விஜயகாந்தின் போராட்ட வாழ்க்கை

    • எம்.ஜி.ஆர். ரசிகராக இருந்தபோதும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மீது அளவு கடந்த மரியாதை வைத்திருந்தார்.
    • சினிமாவிலும், அரசியலிலும் அவர் எளிதில் வெற்றி பெற்றுவிடவில்லை.

    * மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அழகர்சாமி-ஆண்டாள் தம்பதிக்கு 3-வது மகனாக 25-8-1952-ம் ஆண்டு பிறந்தார் விஜயகாந்த். அவரது இயற்பெயர் விஜய ராஜ்.

    இவருக்கு நாகராஜ், பால்ராஜ், ராமராஜ், பிருதிவிராஜ் ஆகிய சகோதரர்களும், டாக்டர் விஜயலட்சுமி, திருமலாதேவி, சித்ரா, மீனா ஆகிய சகோதரிகளும் உள்ளனர்.

    * விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, இந்த தம்பதிக்கு விஜயபிரபாகர், சண்முகபாண்டியன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    * சிறு வயதிலேயே சினிமா மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. குறிப்பாக எம்.ஜி.ஆரின் படங்களை விரும்பி பார்ப்பார். சினிமா மோகத்தால் படிப்பு மீதான நாட்டம் குறைந்தது. இதனால் 10-ம் வகுப்போடு பள்ளி படிப்பை நிறுத்தினார்.

    * மதுரையில் தனது தந்தை அழகர்சாமி நடத்தி வந்த அரிசி ஆலையை சிறிது காலம் கவனித்தார். ஆனால் சினிமா கனவுடன் சென்னை வந்தார். அவரது கனவு நிறைவேறியது. அவர் நடிகரானார். தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

    * எம்.ஜி.ஆர். ரசிகராக இருந்தபோதும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மீது அளவு கடந்த மரியாதை வைத்திருந்தார். அதேபோல் த.மா.கா. தலைவர் ஜி.கே.மூப்பனார் மீதும் பெருமதிப்பு வைத்திருந்தார்.

    * மதுரையில் கடந்த 1990-ம் ஆண்டு நடைபெற்ற அவரது திருமணத்தை கருணாநிதி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அந்த விழாவில் ஜி.கே.மூப்பனாரும் கலந்து கொண்டார்.

    தனது ரசிகர்கள் மத்தியில் பிரேமலதாவை அவர் மணம் முடித்தார். திருமணத்தில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

    * முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடன் நெருங்கி பழகினாலும், அரசியலில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வழியிலேயே பயணிக்க விரும்பினார்.

    அதன்படியே அவர் வழியிலேயே அரசியல் கட்சி தொடங்கினார். எம்.ஜி.ஆரை போன்று அடுத்தவர்களுக்கு உதவும் கொடை வள்ளல் குணம் விஜயகாந்தின் உள்ளத்திலும் குடியிருந்ததால் அவரை கருப்பு எம்.ஜி.ஆர். என்று தே.மு.தி.க.வினர் போற்றினார்கள். எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பண்ரூட்டி ராமச்சந்திரனும் விஜயகாந்துடன் அரசியல் பாதையில் கைக்கோர்த்தார்.

    * சினிமாவிலும், அரசியலிலும் அவர் எளிதில் வெற்றி பெற்றுவிடவில்லை. பல்வேறு போராட்டங்களுக்கு பின்னரே விஜயகாந்த், சாதித்தார். அவரது கட்சியில் இருந்து சில எம்.எல்.ஏ.க்கள் பிரிந்து சென்றபோதும், தேர்தல்களில் தோல்வி கண்டபோதும் அவர் துவண்டுவிடவில்லை.

    * உடல்நிலை பாதிப்புதான் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. சினிமாவில் சாதாரண நடிகனாக நுழைந்து, புரட்சி கலைஞராக உருபெற்று கேப்டனாக நிலைத்து நின்றார். அதேபோல் அரசியலிலும் கேப்டனாகவே இருந்தார்.

    * 2001-ம் ஆண்டு செங்கல்பட்டு அருகே மாமண்டூரில் தனது பெற்றோர் பெயரில் ஸ்ரீ ஆண்டாள் அழகர் என்ற பொறியியல் கல்லூரியை கட்டினார். இந்த கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளையும், கட்டண குறைப்பையும் அவர் நடைமுறைப்படுத்தினார்.

    * 'நான் படிக்காதவன். மற்றவர்களாவது படிக்கட்டும் என்று தான் ஆண்டு தோறும் ஏழை மாணவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். கல்விக்காக செலவிடுவதை விட கல்வியை கற்றுக்கொடுக்க செலவிடலாம் என்று முடிவு செய்தேன். அதனால் இந்த பொறியியல் கல்லூரியை தொடங்கி இருக்கிறேன்', என்று விஜயகாந்த் அப்போது குறிப்பிட்டார்.

    Next Story
    ×