search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுரையில் இருந்து 75 பேரை விமானத்தில் சென்னைக்கு அழைத்து சென்ற தொழிலதிபர்
    X

    மதுரையில் இருந்து 75 பேரை விமானத்தில் சென்னைக்கு அழைத்து சென்ற தொழிலதிபர்

    • ஆண்டுதோறும் சிறப்பு பரிசுகளை அள்ளித்தருவதோடு, சுற்றுலாவுக்கும் அழைத்து சென்று அசத்தி வருவது இவரது வழக்கம்.
    • இன்ப அதிர்ச்சியை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள் திக்குமுக்காடி போனார்கள்.

    மதுரை:

    மதுரை அருகே உள்ள செக்காணூரணியைச் சேர்ந்தவர் மாயன். இவர் சமீபத்தில் காலமான தே.மு.தி.க. கட்சி தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் தீவிர ஆதரவாளர். விஜயகாந்த் நடிகராக இருந்த காலம் முதலே அவரது தீவிர ரசிகராக இருந்து வந்துள்ளார்.

    மதுரை, செக்காணூரனி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டுமானம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழிலில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். இவரிடம் ஏராளமான ஊழியர்கள், பொறியாளர்களாகவும், மேஸ்திரிகளாகவும், கொத்தனாராகவும், சித்தாளாகவும் பணியாற்றி வருகின்றனர்.

    விஜயகாந்த் பாணியை பின்பற்றி தன்னிடம் பணி யாற்றும் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களுக்கு ஆண்டுதோறும் சிறப்பு பரிசுகளை அள்ளித்தருவதோடு, சுற்றுலாவுக்கும் அழைத்து சென்று அசத்தி வருவது இவரது வழக்கம்.

    பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு தனது ஊழியர்களை சுற்றுலா பேருந்தில் அழைத்துச் சென்று, அங்கு சகல வசதிகளுடன் அவர்களுக்கு விருந்தும் அளிப்பார். இது அவர்களுக்கு மறக்க முடியாத மகிழச்சியான அனுபவத்தை அளிப்பதாக இருந் தது. இதனால் மாயன் மீது அவர்களது ஊழியர்கள் மிகுந்த மரியாதையும், மதிப்பும், அன்பும் வைத்துள்ளனர்.

    அந்த வகையில் இந்த ஆண்டு சற்று வித்தியாசமாக யோசித்த மாயன், தனது ஊழியர்களுக்கு விடுமுறை பரிசளிக்க திட்டமிட்டார். அதே நேரத்தில் அவரது அபிமான நடிகர் விஜயகாந்த் மறைந்ததால் அவரது நினைவிடத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலும் அவரிடம் இருந்து வந்துள்ளது.

    எனவே தனது ஊழியர்களை சென்னைக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல எண்ணிய மாயன், தன்னிடம் பணியாற்றும் 35 பெண்கள், 40 ஆண்கள் என மொத்தம் 75 பேரை மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார். இந்த இன்ப அதிர்ச்சியை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள் திக்குமுக்காடி போனார்கள்.

    இதுகுறித்து மாயன் கூறுகையில், விமானத்தில் பறக்க வேண்டும் என்பது எனக்கும் நீண்ட கால கனவாக இருந்தது. நான் ஒப்பந்ததாராக தொழில் தொடங்கி வளர்ச்சி அடைந்ததும் 2002-ல் விமானத்தில் பயணிக்க வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு மறக்க முடியாத அனுபவத்தை அளித்தது. நான் பெற்ற இன்பம் என்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கும் கிடைக்க வேண்டும் என விரும்பினேன் என்றார்.

    அவ்வாறு விமானத்தில் அழைத்துச் சென்ற ஊழியர்களை சென்னை விமான நிலையத்தில் இருந்து பேருந்து மூலமாக விஜயகாந்த் நினைவிடத்துக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அங்கிருந்து மெரீனா பீச், மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கும் அழைத்துச் சென்றதுடன், உயர்தர நட்சத்திர விடுதியிலும் தங்குவதற்கும் ஏற்பாடு செய்தார். அங்கே அவர்களுக்கு சுவையான விருந்து அளித்தும் அவர்களை மகிழ்வித்தார்.

    நட்சத்திர விடுதியில் தனது ஊழியர்களுக்காக சிறப்பு அனுமதி பெற்று அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்து மகிழவும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இதுகுறித்து அவரிடம் பணியாற்று ஊழியர் ஒருவர் கூறுகையில், இது எங்களுக்கு மிகவும் மறக்க முடியாத அற்புதமான அனுபவமாகும். நாங்கள் அனைவரும் இப்போதுதான் முதன் முறையாக விமானத்தில் பறக்கிறோம். இந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

    குஜராத்தில் வைர வியாபாரி ஒருவர் தனது ஊழியர்களுக்கு அவர்களது பணியை பாராட்டி ஆண்டு தோறும் காரை பரிசாக அளிப்பதாக செய்திகள் வருவதுண்டு. நமக்கு அருகிலேயே இப்படி ஒரு அற்புதமான மனிதர் தனது ஊழியர்களுக்கு விமான பயணத்தை அளித்து மகிழ்ச்சி அளித்த சம்பவம் மதுரை மக்களிடையே மிகுந்த வர வேற்பை பெற்றுள்ளது.

    Next Story
    ×