என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நாங்குநேரி அருகே பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த சிறுவன் கைது
- மாணவியின் தாயார் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
- போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பள்ளிக்கு சென்ற அந்த சிறுமி வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனால் அந்த மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து மாணவியின் தாயார் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
உடனடியாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் மாணவியை கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தது தெரிய வந்தது.
சம்பவத்தன்று வந்த சிறுவன், மாணவியை கடத்தி சென்றுள்ளார். பின்னர் திருச்செந்தூருக்கு சென்று அங்கு கோவிலில் வைத்து மாணவியை வற்புறுத்தி கட்டாய திருமணம் செய்ததும் தெரிய வந்தது.
அதன் பின்னர் தஞ்சாவூருக்கு அந்த மாணவியை அழைத்து சென்று வாடகைக்கு வீடு எடுத்து 2 பேரும் குடும்பம் நடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தஞ்சாவூர் சென்று சிறுவனை நெல்லைக்கு அழைத்து வந்தனர். மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.






