என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஈரோடு சம்பத் நகர் சாலையில் சத்தியமங்கலம் மலர் விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்- 300 பேர் கைது
- போராட்டத்திற்கு பல்வேறு விவசாய சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.
- விவசாயிகளின் ஒரு பிரிவினர் வேகமாக கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பெருந்துறை ரோட்டுக்கு வந்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் மலர் சாகுபடி செய்து வருகின்றனர்.
அவர்கள் இணைந்து தமிழ்நாடு மலர்கள் உற்பத்தியாளர்கள் தலைமை சங்கம் என்ற பெயரில் 1999-ம் ஆண்டு சங்கத்தை தொடங்கினர். விவசாயிகளால்- விவசாயிகளுக்காக மலர்கள் சந்தையையும் தொடங்கி 2000-க்கும் மேற்பட்ட மலர் விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்டு சங்கம் இயங்கி வருகிறது.
கடந்த 2013-ம் ஆண்டு சங்கத்தில் நிர்வாகம் சரியில்லை என்றும், முறைகேடுகள் நடைபெற்று வருகிறது என்று பிரச்சினைகளை கிளப்பி இறுதியாக தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டு 800-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாக்களித்து தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாக குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆண்டுதோறும் பொதுக்குழு, செயற்குழுவை நடத்துவது எனவும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வைத்து நிர்வாகிகளை தேர்வு செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் சங்கத்தின் சார்பில் வங்கி கணக்கு தொடங்கி வரவு செலவு செய்யாமல் தனிப்பட்ட முறையில் வங்கி கணக்கு தொடங்கி வரவு செலவு செய்து அதற்கு முறையாக கணக்கை செயற்குழு, பொதுக்குழுவில் தாக்கல் செய்யாமலும், சங்கங்களின் பதிவாளர் முன்பும் தாக்கல் செய்யாமலும், மிகப்பெரிய அளவில் மோசடி செய்துள்ளனர்.
இவற்றையெல்லாம் மறைப்பதற்காக கடந்த 2016-ம் ஆண்டு 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சொந்தமான சங்கத்தின் சொத்துக்களான வியாபாரம், சுங்க பணம் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும், 32 பேரை மட்டும் கொண்டு சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கம் என்கிற சங்கத்தை புதிதாக தொடங்கி மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து பல்வேறு சமயங்களில் கேள்வி கேட்ட விவசாயிகளை சந்தையில் பூ விற்க விடாமல் புறக்கணிப்பு செய்து மிக பெரிய மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையிலும், வருவாய்த்துறையிலும் உரிய வகையில் புகார் கொடுக்கப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும் சங்கங்களின் பதிவாளரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சொந்தமான சொத்துக்களோடு, சுங்க பணத்தோடு இயங்கி வரும் சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தில் அனைத்து விவசாயிகளையும் உறுப்பினராக சேர்த்து தேர்தல் நடத்த கோரியும், நடைபெற்ற ஊழல், மோசடி குறித்து ஆதாரத்தோடு கொடுக்கப்பட்ட புகாரின் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர்.
இந்த போராட்டத்திற்கு பல்வேறு விவசாய சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து இருந்தனர். ஆனால் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. எனினும் தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.
இதனால் இன்று காலை ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் டவுன் டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையில் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று காலை ஈரோடு சம்பத் நகரில் உள்ள கொங்கு கலையரங்கம் முன்பு சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் குடும்பத்துடன் வர தொடங்கினர். பின்னர் அவர்கள் ஒன்று சேர்ந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர்.
அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே விவசாயிகளின் ஒரு பிரிவினர் வேகமாக கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பெருந்துறை ரோட்டுக்கு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அவர்களும் பெருந்துறை ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கலெக்டர் அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் கொங்கு கலையரங்கம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட 280-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டு அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இதனால் இன்று காலை கலெக்டர் அலுவலகம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.






