search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கைது
    X
    கைது

    பார்சலில் மரக்கட்டை வைத்து ஆன்லைன் நிறுவனத்தை ஏமாற்றிய தம்பதி- மனைவி கைது

    லேப்டாப், விலை உயர்ந்த கடிகாரத்தை எடுத்து கொண்டு பார்சலில் மரக்கட்டை வைத்து ஆன்லைன் நிறுவனத்தை ஏமாற்றிய சம்பவம் குறித்து மனைவியை கைது செய்த போலீசார் கணவரை தேடி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த வேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ராதிகா.

    கார்த்திக் ஆன்லைன் மூலம் ரூ.44 ஆயிரத்து 900 மதிப்புள்ள ஆப்பிள் வாட்ச், ரூ.44,900 மதிப்புள்ள லேப்டாப் உள்பட 3 பொருட்களை ஈரோடு சங்கு நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு ஆன்லைன் நிறுவனத்தில் ஆர்டர் செய்து இருந்தார்.

    சம்பவத்தன்று அந்த நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக வேலை பார்க்கும் நவீன் என்பவர் கார்த்திக் ஆர்டர் செய்த லேப்டாப், ஆப்பிள் வாட்ச் உள்பட 3 பொருட்களை பார்சலில் வேலம்பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் சென்றார்.

    அப்போது கார்த்திக் மனைவி ராதிகா வீட்டிற்கு வெளியே வந்து நவீன் கொண்டு வந்த 3 பொருட்களை பெற்றுக் கொண்டார். பின்னர் அந்த பார்சலை தனது கணவர் கார்த்திக்கிடம் கொடுத்து விட்டு டெலிவரி ஊழியர் நவீனிடம் சுமார் 30 நிமிடம் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது கார்த்திக் 3 பார்சல்களில் ஒரு பார்சலை மட்டும் எடுத்துக் கொண்டு மீதமுள்ள 2 பார்சலை நவீனிடம் கொடுத்து விட்டு ஆன்லைன் மூலம் பணம் செலுத்த முடியவில்லை என்று கூறி ஒரு பார்சலுக்கான தொகை ரூ.546 மட்டும் கொடுத்து விட்டு நாளை பணம் கொடுத்து விட்டு மற்ற 2 பொருட்களை பெற்றுக் கொள்வதாக கூறினார்.

    அப்போது பார்சலை திரும்ப பெற்ற டெலிவரி ஊழியர் நவீன் பார்சல் எடை அதிகமாக இருக்கிறது என்று கேட்டுள்ளார். அதற்கு கார்த்திக் எனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறிவிட்டு தனது மனைவியுடன் வீட்டுக்குள் சென்றுவிட்டார்.

    பின்னர் நவீன் மற்ற டெலிவரிகளை முடித்துக் கொண்டு இரவு அலுவலகத்திற்கு வந்து நடந்தவற்றை எல்லாம் உயரதிகாரியிடம் கூறி பார்சலை கொடுத்தார்.

    இதையடுத்து சந்தேகமடைந்த அவர்கள் பார்சலை திறந்து பார்த்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பார்சலில் ஆப்பிள் வாட்சுக்கு பதிலாக சாதாரண வாட்ச் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் மடிக்கணினிக்கு பதில் மரக்கட்டை வைக்கப் பட்டிருந்தது.

    இதனை அடுத்து அந்த நிறுவனத்தினர் கார்த்திக் வீட்டுக்கு சென்று இது குறித்து கேட்டபோது கார்த்திக் மனைவி ராதிகா முன்னுக்குப்பின் முரணாக பேசி உள்ளார். நூதன முறையில் கணவன்- மனைவி ஏமாற்றியதை உணர்ந்த அவர்கள் இது குறித்து மலையம்பாளையம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சென்னை போலீசார் வேறு ஒரு மோசடி வழக்கில் ராதிகாவை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்து இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இந்த மோசடி வழக்கிலும் ராதிகாவை கைது செய்தனர். மேலும் தலைமறைவான அவரது கணவர் கார்த்திக்கை தேடி வருகின்றனர்.

    கார்த்திக் சேலத்தில் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்தபோது தனது மனைவி ராதிகா உடன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நூதன முறையில் பல்வேறு இடங்களில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது. குண்டர் சட்டத்தின் கீழும் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான கார்த்திக்கை தொடர்ந்து தேடி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×