search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம்
    X
    ஓ.பன்னீர்செல்வம்

    முல்லை பெரியாறு அணை பிரச்சனை: அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

    தமிழ்நாட்டிற்கு எதிரான கேரள அரசின் நடவடிக்கையை உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும், புதிய அணை கட்டுவது தொடர்பான எந்த பேச்சுவார்த்தைக்கும் இடம் தரக்கூடாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக்கொள்ளவும், பேபி அணை மற்றும் சிற்றணை ஆகியவை பழுது பார்க்கப்பட்டு, பலப்படுத்தப்பட்ட பின் அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்திக் கொள்ளவும், பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்வதற்கும் கேரள அரசு எந்தவித இடையூறும் அளிக்கக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

    உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பேபி அணையை பலப்படுத்தும் வகையில் அதற்குக் கீழுள்ள 23 மரங்களை வெட்டுவது தொடர்பான கருத்துரு கம்பம் நீர் ஆதாரத்துறையின் செயற்பொறியாளரால் கேரள வனத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதனைப் பரிசீலித்த பெரியாறு புலிகள் காப்பக கிழக்குக் கோட்ட துணை இயக்குநர் தமிழ்நாட்டிற்கு குத்தகைக்கு விடப்பட்ட முல்லைப்  பெரியாறு பகுதியில் உள்ள 15 மரங்களை வெட்ட பரிந்துரை செய்த கேரள அரசின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன விலங்கு காப்பாளருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

    இதன் அடிப்படையில் கேரள அரசின் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளர் அங்குள்ள 15 மரங்களை வெட்டிக்கொள்ள அனுமதி அளித்தார்.

    இதனையடுத்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள அரசிற்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். இந்த செய்தி அனைத்து பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வந்தது. இதற்கு மறுநாளே, கேரள மாநில வனத்துறை அமைச்சர் மரங்களை வெட்ட அனுமதி கொடுத்தது தனக்கு தெரியாது என்றும், கேரள முதல்-மந்திரிக்கோ, நீர் பாசனத்துறை மந்திரிக்கோ, வனத்துறை மந்திரிக்கோ எதுவும் தெரியாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

    மரங்களை வெட்ட அனுமதி அளித்த ஆணை வெளிவந்த மறுவினாடியே கேரள முதல்-மந்திரிக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்-அமைச்சர் அதற்கு பிறகு நடந்த நிகழ்வுகள் குறித்து மவுனமாக இருப்பது வியப்பாக இருக்கிறது.

    கேரளாவுக்கு ஆதரவான மனநிலையில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் இருப்பதாக பொது மக்களும், விவசாயப் பெருங்குடி மக்களும் நினைக்கும் சூழ்நிலை தமிழ்நாட்டில் உருவாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கின்ற கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.

    ஆனால் தமிழ்நாட்டின் உரிமை என்று வரும்போது அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய கடமை தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளைப் பெற்று எம்.எல்.ஏ.க்களாக, எம்.பி.க்களாக, அமைச்சர்களாக இருக்கின்ற அனைவருக்கும் உண்டு. இந்த வி‌ஷயத்தில் மவுனம் சாதிப்பது என்பது தமிழ்நாட்டின் உரிமையை கேரளாவுக்கு அடகு வைத்ததற்கு சமம்.

    முல்லைப் பெரியாறு பிரச்சனையில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதோடு, இது குறித்து அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி, விவாதித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஒருமித்த முடிவினை எடுக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணை குறித்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் வருவதாக கூறப்படுகிறது. அப்போது இதுகுறித்து வலுவான வாதங்களை தமிழ்நாட்டின் சார்பில் எடுத்துரைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் உள்ளது.

    தமிழக முதல்-அமைச்சர் இந்தப் பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு, பேபி அணையை வலுப்படுத்த கேரள அரசு இடையூறு அளிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் ஆண்டுக்கணக்கில் இடையூறு அளித்து வரும் கேரள அரசை தட்டிக் கேட்க வேண்டும் என்றும், மரங்களை வெட்டுவதற்கான அனுமதி ஆணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை திரும்பப் பெற கேரள அரசை வலியுறுத்த வேண்டும்.

    இந்த பிரச்சனை குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க ஏதுவாக அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும், தமிழ்நாட்டிற்கு எதிரான கேரள அரசின் நடவடிக்கையை உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும், புதிய அணை கட்டுவது தொடர்பான எந்த பேச்சுவார்த்தைக்கும் இடம் தரக்கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×