search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மறுவாக்கு பதிவு கேட்டு மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
    X
    மறுவாக்கு பதிவு கேட்டு மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

    மறுவாக்கு பதிவு கேட்டு இரவு முழுவதும் மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

    அரக்கோணம் ஆர்.டி.ஓ மற்றும் அரக்கோணம் டி.எஸ்.பி ஆகியோர் மீண்டும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் எதிர் தரப்பு வேட்பாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகிய 3 பேர் மீது அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவேரிப்பாக்கம், சோளிங்கர், அரக்கோணம் நெமிலி ஆகிய ஒன்றியங்களுக்கு 2ம் கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது.

    நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்டது மேலபுலம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் மேலபுலம் புதூர், மோட்டூர், ராமாபுரம், நங்கமங்கலம், எம்.ஜி.ஆர். நகர், அண்ணா நகர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது.

    இந்த ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகளில் 6000 வாக்காளர்கள் உள்ளனர்.ஊராட்சி தலைவர் பதவிக்கு சுயேட்சையாக 2 பெண் பேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேலபுலம் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைபள்ளியில் வாக்குசாவடி மையத்தில் ஓட்டுபதிவு நடந்தது.

    இந்த நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஒருவர் ஒரு தரப்பு வேட்பாளரின் உறவினர் என கூறப்படுகிறது. அவர் அந்த வேட்பாளருக்கு சாதகமாக செயல்படுவதாக புகார் எழுந்தது.

    மேலும் முதியவர்கள், பெண்கள் வாக்காளர்கள் வாக்கு அளித்த வாக்கு சீட்டினை சரியாக மடிக்காமல் தலைகீழாக 2 சின்னங்களில் முத்திரை பதியும்படி வாக்கு சீட்டினை மடித்துள்ளார் என மற்றோரு வேட்பாளர் தரப்பினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இப்படி வாக்குசீட்டினை மடித்தால் அந்த வாக்கு செல்லாத வாக்கு ஆகும் என ஒரு தரப்பினர் வாக்கு அளிப்பதை நிறுத்தினர்.

    மேலும் ஓச்சேரி பனப்பாக்கம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் டி.எஸ்.பி புகழேந்தி கணேஷ், அவளூர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் (பொறுப்பு) சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இருப்பினும் மற்றொரு தரப்பு வேட்பாளர் மத்தியில் 6,8 வார்டுக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் டி.எஸ்.பி பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாமல் மறு தேர்தல் நடத்த வேண்டும். தேர்தல் ஆணையத்திலிருந்து அதிகாரிகள் வர வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு தேர்தல் வாக்கு பெட்டிகளை எடுத்து செல்ல விடாமல் மேலப்புலம் அரசு மேல்நிலைபள்ளி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இரவு 12 மணி வரை சுமார் 5 மணி நேரம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

    மேலும் விடிற்காலை 3மணியளவில் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அரக்கோணம் ஆர்.டி.ஓ மற்றும் அரக்கோணம் டி.எஸ்.பி ஆகியோர் மீண்டும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் எதிர் தரப்பு வேட்பாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகிய 3 பேர் மீது அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மறு வாக்கு பதிவு நடப்பதற்கு சாத்தியகூறு இல்லை.

    12-ந்தேதி வாக்கு எண்ணும் நாளான்று நீங்கள் சொல்லிய குற்றசாட்டு உறுதி செய்யப்பட்டால் சம்மந்தபட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி, எதிர்தரப்பு வேட்பாளர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    அதிகாலையில் வாக்கு பெட்டிகளை எடுத்து சென்றனர்

    இதையடுத்து அதிகாலை 4 மணியவில் மறியலை கைவிட்டனர். அதைத் தொடர்ந்து அதிகாரிகள் அதிகாலையில் வாக்கு பெட்டிகளை ஓட்டு எண்ணும் மையத்திற்கு கொண்டு சென்றனர்.

    Next Story
    ×