search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி கைப்பட எழுதிய குறிப்பேட்டினை காணலாம்.
    X
    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி கைப்பட எழுதிய குறிப்பேட்டினை காணலாம்.

    கருணாநிதி அரசு பள்ளியில் எழுதிய குறிப்பை டுவிட்டரில் பதிவிட்ட கலெக்டர்

    குளித்தலை எம்.எல்.ஏ.வாக இருந்த மு.கருணாநிதி அரசு பள்ளியில் எழுதி வைத்திருந்த குறிப்பேட்டினை பாதுகாப்பாக பராமரித்து பத்திரமாக வைக்க வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியருக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டராக பிரபுசங்கர் கடந்த 16-ந்தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து அவர் கடந்த 16-ந்தேதி கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் வேங்காம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை ஆய்வு செய்தார்.

    இந்தநிலையில் அந்த பள்ளிக்கு வருகை தரும் முக்கிய நபர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பள்ளி பற்றிய குறிப்புகள் எழுதி வைத்திருந்த குறிப்பேடுகளை கலெக்டர் பார்வையிட்டார்.

    அப்போது, ஒரு குறிப்பேட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி, 1956-ம் ஆண்டு குளித்தலை எம்.எல்.ஏ.வாக இருந்தபோது இந்த பள்ளிக்கு வந்து ஆய்வு செய்து கைப்பட எழுதி இருந்த வாசகம் ஒன்று இடம் பெற்று இருந்தது.

    வேங்காம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி

    அதில், ‘இன்று வேங்காம்பட்டி மாவட்ட மன்ற ஆரம்ப பாடச்சாலையை பார்வையிட்டேன். இரண்டு ஆசிரியர்களும் இருந்தார்கள். மொத்த மாணவர்கள் 107 பேரில் இன்று வருகை தந்தவர்கள் 71 பேர். இந்த பள்ளிக்கென கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் மேல் மரங்கள் உளுத்து போயிருக்கின்றன. அவை உடனடியாக கவனிக்கப்பட்டால் நலம். ஆசிரியர்கள் நன்கு பணியாற்றுவதால் பொதுமக்கள் பாராட்டினார்கள். மாணவர்களின் சுகாதாரம் இன்னும் அதிகமாக கவனிக்கப்படுதல் நன்று. அன்புள்ள மு.கருணாநிதி’.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதையடுத்து இந்த குறிப்பேட்டினை பாதுகாப்பாக பராமரித்து பத்திரமாக வைக்க வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியருக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

    பின்னர் இந்த குறிப்பேட்டின் தகவலை கலெக்டர் பிரபுசங்கர் படம் எடுத்து, அதனை நெகிழ்ச்சியுடன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
    Next Story
    ×