என் மலர்
செய்திகள்

கொலை
மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்த பெண் வெட்டிக்கொலை- வாலிபர் வெறிச்செயல்
மகளை திருமணம் செய்துகொடுக்க மறுத்த பெண்ணை, ஒருதலைக்காதலால் வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பெரிய மொடச்சூர் சங்கரன் வீதியைச் சேர்ந்தவர் மேரி (வயது 56). இவருடைய கணவர் தமிழ்தாசன். கடந்த 7 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர். முதல் மகள் அன்னமேரிக்கு திருமணம் ஆகிவிட்டது. மற்ற 4 மகள்களுக்கும் திருமணம் ஆகவில்லை.
மேரி ரெடிமேட் ஜவுளி மற்றும் பேன்சி பொருட்களை தன்னுடைய வீட்டிற்கு முன்பாக தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்து வந்தார்.
கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோபியை அடுத்துள்ள ஒத்தக்குதிரை கள்ளியங்காட்டு மாரியம்மன் கோவில் அருகில் மேரி தனது 4 மகள்களுடன் குடியிருந்து வந்தார்.
அப்போது அதே பகுதியில் குடியிருந்த பர்கூரைச் சேர்ந்த லாரி டிரைவர் முருகன் என்பவர் மேரியின் கடைசி மகளை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனால் அந்த இளம்பெண்ணுக்கு அடிக்கடி அவர் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதற்கு மேரி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், ஆத்திரம் அடைந்த முருகன் உன் மகளை எனக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் யாரும் உயிரோடு இருக்க முடியாது என செல்போனில் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் முருகனுக்கு பயந்து கோபி பெரியமொடச்சூர் சங்கரன் வீதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேரி தனது மகள்களுடன் குடிவந்து விட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மேரி தனது மருமகன் புஷ்பராஜ், மகள் அன்னமேரி ஆகியோருடன் வாசலில் நின்று பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் முருகன் அங்கு வந்தார். பின்னர் தான் கொண்டு வந்திருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு மேரியின் அருகே சென்று, உன் மகளை எனக்கு திருமணம் செய்து கொடுக்க மறுக்கிறாயா? என ஆவேசத்துடன் கூறி அரிவாளால் மேரியை சரமாரியாக வெட்டினார். இதில் அவருக்கு உடலில் பல இடங்களில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அதைத் தடுக்க வந்த கணேசன் என்பருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இருவரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே முருகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
மேரி மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முருகனை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Next Story






