என் மலர்
செய்திகள்

ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் மத்திய அரசின் நிதி உண்மையான விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை- முத்தரசன்
கும்பகோணம்:
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. கும்பகோணம் அருகே தாராசுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா தொற்று நேரத்தில் மத்திய-மாநில அரசுகள் பொதுமக்கள் வாங்கிய கடனுக்கு வட்டிமேல் வட்டி வசூல் செய்து வருகிறது. இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. வழக்கு விசாரணையில் வட்டியை வசூல் செய்வோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது வேதனையை தருகிறது. புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய தமிழக அரசு கமிட்டி அமைத்துள்ளது வரவேற்கத்தக்கது.
கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு மாதம் தலா ரூ.5 ஆயிரம், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மாதம் தலா ரூ.7500 உதவித்தொகை வழங்க வேண்டும்.
மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்ட வேலை நாட்களை 200 நாட்களாக அதிகரிப்பதோடு, ஊதியத்தையும் அதிகரிக்க வேண்டும் மானியங்களை வழங்குவதால் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்ற மத்திய அரசின் கருத்தை ஏற்க முடியாது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை போல வருகிற சட்டமன்ற தேர்தலிலும் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். கொரோனாவை பயன்படுத்தி தமிழக அரசு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக கொரோனா நோய் பாதிக்கப்பட்டவருக்கு ஒதுக்கப்படும் தொகையில் முறைகேடு நடைபெறுகிறது.
அன்பழகன் எம்.எல்.ஏ. முதல்-அமைச்சரை சந்தித்து கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு பின் தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் கும்பகோணம் தனி மாவட்டமாக அமையும். விவசாயிகளுக்கு மத்திய அரசு ரூ.6 ஆயிரம் உதவித்தொகையை 3 தவணைகளாக வழங்கி வருகிறது. இதில் பெரும்பாலான பணம் உண்மையான விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி வரும் தனியார் நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.