search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழந்த மகன்-தந்தை
    X
    உயிரிழந்த மகன்-தந்தை

    சாத்தான்குளம் வழக்கு- விசாரணை அறிக்கையை 17ந்தேதிக்குள் தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

    சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணை அறிக்கையை வருகிற 17-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ.க்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    மதுரை:

    சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த மாதம் 19-ந்தேதி போலீசாரால் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் திடீரென அடுத்தடுத்து இறந்தனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த சம்பவத்தை தாமாக முன் வந்து மதுரை ஐகோர்ட்டு விசாரித்தது.

    தந்தை-மகன் இறந்தது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. அதை தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதுவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படியும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து இந்த சம்பவத்தை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 10 போலீசாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு விசாரணையை அறிக்கையாக தாக்கல் செய்யும்படியும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்தநிலையில் மதுரை ஐகோர்ட்டு தாமாக பதிவு செய்த வழக்கும், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு குமார், துணை சூப்பிரண்டு பிரதாபன் உள்ளிட்ட 3 போலீஸ்காரர்கள் மீதான கோர்ட்டு அவமதிப்பு வழக்கும் நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.

    அப்போது ஜெயராஜ்-பென்னிக்ஸ் வழக்கு விசாரணை தொடர்பான அறிக்கை முத்திரையிடப்பட்ட கவரில் வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு சென்ற கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டுவிடம் தரக்குறைவாக நடந்தது குறித்து போலீஸ் அதிகாரிகள் குமார், பிரதாபன் மற்றும் போலீஸ்காரர் மகாராஜன் ஆகியோரை தனித்தனியாக விளக்கம் அளிக்கும்படி ஏற்கனவே கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

    இதையடுத்து குமார், பிரதாபன் ஆகியோர் தனித்தனியாக தங்களது விளக்கத்தை அவரவரின் வக்கீல்கள் சார்பில் தாக்கல் செய்தனர். போலீஸ்காரர் மகாராஜனின் விளக்கத்தை தாக்கல் செய்ய அவரது வக்கீல் அவகாசம் கோரினார்.

    அதனை தொடர்ந்து ஆஜரான மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கதிர்வேலு, “ஜெயராஜ்-பென்னிக்ஸ் வழக்கை விசாரித்துவரும் சி.பி.ஐ. சிறப்பு குழுவில் 5 பேர் கொரோனாவால் பாதிக் கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது”என்றார்.

    பின்னர் இந்த வழக்கில் தங்களையும் ஒரு மனுதாரர்களாக சேர்க்க வேண்டும் என ஜெயராஜின் மனைவி செல்வராணி, மக்கள் கண்காணிப்பகம் நிறுவனர் ஹென்றி டிபேன் ஆகியோர் சார்பில் முறையிடப்பட்டது. விசாரணை முடிவில், ஜெயராஜ்-பென்னிக்ஸ் வழக்கு விசாரணை அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் வைத்து சி.பி.ஐ. போலீசார் வருகிற 17-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை 17-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
    Next Story
    ×