search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ணை வீட்டில் மாணவிகள், பெண்களை சீரழித்த கும்பல் - செல்போன்களில் உல்லாச காட்சிகள் சிக்கியது
    X

    பண்ணை வீட்டில் மாணவிகள், பெண்களை சீரழித்த கும்பல் - செல்போன்களில் உல்லாச காட்சிகள் சிக்கியது

    ‘பேஸ்புக்’ மூலம் பழக்கமான கல்லூரி மாணவிகள் மற்றும் குடும்ப பெண்கள் என 100-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் சிக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பொள்ளாச்சி:

    கோவை பொள்ளாச்சியில் ‘பேஸ்புக்’ மூலம் பழக்கமான கல்லூரி மாணவியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்த சபரி என்ற ரிஷ்வந்த்(25), சூளேஸ் வரன்பட்டியை சேர்ந்த சதிஷ் (28), பக்கோதிபாளையத்தை சேர்ந்த வசந்தகுமார் (24) ஆவார்கள். கைதான சபரி என்ஜினீயர் ஆவார். சதிஷ் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

    இவர்களது நண்பரான பொள்ளாச்சி மாக்கினாம் பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு(26) என்பவர் இந்த கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டுள்ளார். வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்ஸ் தொழில் செய்து வந்த இவர் கார் வாங்கி விற்பனையும் செய்து வந்தார். இவர் வட்டிக்கு கொடுத்தவர்களிடம் பணத்தை வசூலிப்பது தான் வசந்தகுமாரின் வேலை.

    கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிக்கரமான தகவல்கள் வெளிவந்தன. இந்த கும்பல் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து இதுவரை கல்லூரி மாணவிகள், குடும்ப பெண்கள், வேலைக்கு செல்லும் இளம் பெண்கள் என 100-க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரிய வந்தது.

    அழகான பெண்கள், மாணவிகளின் செல்போன் எண்ணை வாங்கி கொடுப்பது திருநாவுக்கரசின் வேலை. சபரி அந்த எண்ணில் தொடர்பு கொண்டு மாணவிகளிடம் ஆசை வார்த்தைகள் கூறி தனது வலையில் வீழ்த்தி விடுவார். இதற்காக சபரி தனது பெயரை ரிஷ்வந்த் என மாற்றி உள்ளார்.

    தன்னிடம் சிக்கிய மாணவிகளை சபரி, ஆனைமலை அருகே சின்னப்பம்பாளையம் பகுதியில் உள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார்.

    இதை சபரியின் நண்பர்கள் மறைந்திருந்து வீடியோ எடுத்துக்கொண்டு, அந்த வீடியோவை காட்டி மிரட்டி மற்றவர்களும் பலாத்காரம் செய்துள்ளனர். சில பெண்களை மிரட்டி பணமும் பறித்துள்ளனர்.

    கைதானவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களில் 50-க்கும் மேற்பட்ட பெண்களின் உல்லாச வீடியோக்கள் கிடைத்துள்ளது. இந்த கும்பலின் தலைவனான திருநாவுக்கரசிடம் ஏராளமான பெண்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்த வீடியோக்கள் இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். தலைமறைவாக உள்ள அவரை கைது செய்ய தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையே, இந்த கும்பல் பற்றி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்த மாணவியின் சகோதரரை சபரியின் நண்பர்கள் செந்தில்(33), பாபு(26), வசந்தகுமார்(20) மற்றும் மணிகண்டன் ஆகியோர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் செந்தில், பாபு, வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். இதில் தலைமறைவாக உள்ள மணிகண்டனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மாணவிகள் உள்பட பல பெண்களை ஆபாச வீடியோ எடுத்துள்ள இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளை போலீசார் தப்பிக்க வைக்க முயற்சி செய்வதாக புகார் எழுந்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்துள்ள இந்த கும்பலை சேர்ந்தவர்கள் மீது சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதனால் குற்றவாளிகள் எளிதில் எந்த வித தண்டனையும் கிடைக்காமல் தப்பி விடுவார்கள் என கூறும் சமூக ஆர்வலர்கள், வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றனர்.

    இந்த கும்பல் பற்றிய அதிர்ச்சிக்கரமான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் பொள்ளாச்சி வக்கீல்கள் சங்கம் சார்பாக அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பொள்ளாச்சி வக்கீல்கள் யாரும் ஆஜராக மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றினர்.

    இந்த பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளை வெளிக் கொண்டு வராமல் போலீசார் பாதுகாப்பு அளிப்பதாகவும், எனவே இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இந்த குற்றங்களில் தொடர்புடையவர்கள் மீது சாதாரண பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளதற்கு போலீசாருக்கு கண்டனம் தெரிவித்தும் வக்கீல்கள் சங்கம் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் தி.மு.க.வினர் டி.எஸ்.பி. அலுவலகத்தில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக் கோரி மனு அளித்தனர்.

    இதுகுறித்து கிழக்கு போலீசார் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் புகார் தெரிவித்தால், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கூறுகையில், பொள்ளாச்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது துரதிஷ்டவசமானது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்றார். #tamilnews
    Next Story
    ×