search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் அருகே பள்ளத்தில் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து - பனியன் நிறுவன உரிமையாளர் பலி
    X

    சேலம் அருகே பள்ளத்தில் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து - பனியன் நிறுவன உரிமையாளர் பலி

    சேலம் பட்டர்பிளை மேம்பாலத்தில் இருந்த ஆம்னி பஸ் 30 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பனியன் நிறுவன உரிமையாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    பெங்களூருவில் இருந்து நேற்று இரவு சேலம் மாவட்டம் வழியாக பொள்ளாச்சிக்கு தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. படுக்கை வசதியுடன் கூடிய இந்த பஸ்சில் 28 பயணிகள் பயணம் செய்தனர்.

    இந்த பஸ்சை சேலம் மாவட்டம் தாரமங்கலம், நாச்சினம்பட்டி பகுதியை சேர்ந்த டிரைவர் சரவணன் என்பவர் ஓட்டி வந்தார்.

    இன்று அதிகாலை 4 மணிக்கு பஸ் சேலம் கொண்டலாம் பட்டி பட்டர்பிளை மேம்பாலத்தில் சென்றபோது திடீரென நிலைதடுமாறி தலைகீழாக பாலத்தில் இருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் உயிர் பயத்தால் அலறினார்கள்.

    இந்த விபத்தில் பஸ்சில் இருந்த திருப்பூர், ஜம் ஜம் நகரை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் தனசேகரன் (வயது 42) என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் டிரைவர் சரவணன், துரைசாமி, அஸ்வின், அபினாஸ், திஸ்முகமது உள்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இது பற்றி போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து கேள்விப்பட்டதும் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி மற்றும் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

    பஸ் இடிபாடுகளில் சிக்கியவர்களை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆகியோர் சேர்ந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவர்களுக்கு முகம், கை, கால், தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த அடிப்பட்டு இருந்தது. வலியால் அய்யோ, அம்மா என கதறியபடி இருந்தனர். பயணிகள் சிலர் பதட்டத்துடனே இருந்தனர்.

    பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 12 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். 4 பேர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அவர்களுக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ் 5 கிரேன்கள் மூலம் தூக்கி நிலைநிறுத்தப்பட்டு, அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

    விபத்து குறித்து விசாரணை நடத்தியதில் பஸ்சின் மேற்கூரையில் அதிக பொருட்கள் ஏற்றி வந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்தது.

    காயம் அடைந்த பயணிகள் கூறுகையில், நாங்கள் எப்படியோ அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துக் கொண்டோம். கடவுளுக்கு நன்றி கண்ணீர் மல்க என்றனர்.

    Next Story
    ×