search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட பாலாஜி
    X
    கைது செய்யப்பட்ட பாலாஜி

    காதல் விவகாரத்தில் தகராறு- கல்லூரி மாணவரை கொலை செய்த வாலிபர் கைது

    கோவையில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவரை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் கண்ணன். கூலி தொழிலாளி.

    இவரது மகன் முரளிதரன் (வயது 19). கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த பாலாஜி(24) என்பவருக்கும் இடையே பெண் விவகாரத்தில் முன்விரோதம் இருந்து வந்தது. டிப்ளமோ படித்துள்ள பாலாஜி கூலி வேலைக்கு சென்று வந்தார்.

    நேற்று இரவு முரளிதரன் மற்றும் அவரது நண்பர்கள் நவின்பிரபு, பிரசாத் ஆகியோர் கெம்பட்டிகாலனியில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது அங்கு வந்த பாலாஜிக்கும், முரளிதரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த பாலாஜி மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளிதரனின் மார்பில் குத்தி விட்டு தப்பி ஓடினார்.

    ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்த முரளிதரனை நண்பர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். வழியிலேயே அவர் இறந்து விட்டார்.

    கொலை குறித்து தகவல் அறிந்ததும் பெரியகடைவீதி போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தப்பி ஓடிய பாலாஜியை கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    கைதான பாலாஜியும் பிளஸ்-1 மாணவி ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பாலாஜியுடன் பழகுவதை மாணவி நிறுத்தி விட்டார். அதன்பிறகு முரளிதரனின் நண்பர் ஒருவருடன் மாணவி பேசி பழகி வந்துள்ளார். கடந்த 23-ந்தேதி மாணவியின் பிறந்த நாளையொட்டி அந்த வாலிபர் மற்றும் முரளிதரன் ஆகியோர் மாணவியின் வீடு அருகே சென்று அவரை சந்தித்து பிறந்த நாள் பரிசு கொடுத்துள்ளனர்.

    அப்போது அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் கும்பலாக சேர்ந்து முரளிதரன் மற்றும் அவரது நண்பரை சூழ்ந்து கொண்டு எங்கள் பகுதிக்கு நீங்கள் எப்படி வரலாம்? என கூறி தகராறு செய்துள்ளனர். கும்பலில் இருந்த பாலாஜி, நான் காதலித்த பெண்ணுடன் நீங்கள் எப்படி பேசலாம்? என கூறி இருவரையும் கண்டித்துள்ளார். அங்கிருந்து ஒருவழியாக முரளிதரன் தப்பி சென்றார்.

    இச்சம்பவத்தில் முரளிதரனுக்கும், பாலாஜிக்கும் விரோதம் உருவாகியது. நேற்று இரவு வேலை முடிந்து பாலாஜி வீட்டுக்கு நடந்து சென்ற போது அவரை முரளிதரனும், நண்பர்களும் சேர்ந்து தடுத்து நிறுத்தி தகராறு செய்துள்ளனர். இதில் ஆவேசமடைந்து அவர் முரளிதரனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

    இவ்வாறு போலீசார் கூறினர்.

    பாலாஜி கூறிய தகவல்களை வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்தனர். இன்று மாலை அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

    Next Story
    ×