search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் போராட்டம் - 4-வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல்
    X

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் போராட்டம் - 4-வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல்

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 4-வது நாளாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ந் தேதி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்

    4-வது நாளான இன்று சேலம் நாட்டாண்மை கட்டிடம் முன்பு மாவட்டம் முழுவதும் இருந்து வந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர்.

    பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அரசின் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.

    இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலகம் முன்பு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் இந்த போராட்டத்தால் பள்ளிகளில் கற்பித்தல் பணி, மற்றும் அரசு பணிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சில பள்ளிகளை சத்துணவு ஊழியர்களை வைத்து தற்போது நடத்தி வருகிறார்கள்.

    சேலம் மாவட்டம் முழுவதும் போராட்டத்தில் பங்கேற்றுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும் நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    இதே போல நாமக்கல் மாவட்டத்தல் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 1500-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 4-வது நாளாக இன்று நாமக்கல் பூங்கா சாலையில் திரண்டனர்.

    பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பியபடியே அந்த பகுதியில் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    இதற்கிடையே ரூ.7 ஆயிரத்து 500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மூலம் புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கும் நடவடிக்கையில் மாவட்ட கல்வி அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×