search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருத்தாசலத்தில் கரும்பு நிலுவை தொகை கேட்டு மண்டை ஓடுகளுடன் விவசாயிகள் போராட்டம்
    X

    விருத்தாசலத்தில் கரும்பு நிலுவை தொகை கேட்டு மண்டை ஓடுகளுடன் விவசாயிகள் போராட்டம்

    விருத்தாசலத்தில் கரும்பு நிலுவை தொகை கேட்டு மண்டை ஓடு மற்றும் மனித எலும்புகளுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விருத்தாசலம்:

    விருத்தாச்சலம் பாலக்கரையில் கரும்புக்கான நிலுவை தொகை வழங்க கோருதல் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7 -ந் தேதியிலிருந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் விருத்தாசலம் பாலக்கரையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விருத்தாச்சலம் சப்கலெக்டர் பிரசாந்த், தாசில்தார் கவியரசு ஆகியோர் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படாததால் விவசாயிகள் போராட்டத்தை தொடருவோம் என்றனர். அதன்படி இன்று காலை விவசாயிகள் மண்டையோடு மற்றும் மனித எலும்புகளையும் வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தனியரசு தலைமை தாங்கினார்.

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு பங்கேற்றார். பின்னர் அவர் கூறியதாவது:-

    உலகம் முழுவதும் பதவி உயர்வு கேட்டும் ஊதிய உயர்வு கேட்டும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. ஆனால் நாங்கள் இருபத்தி மூன்று மாதங்களுக்கு முன்பு எங்களுடைய கரும்புகளை வெட்டி சித்தூர் தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்பினோம். ஆனால் அந்த கரும்பிற்கான பணத்தை கேட்டு போராட வேண்டிய ஒரு அவல நிலையில் இன்று போராடி வருகிறோம். ஆனால் அந்த பணத்தை சம்பந்தப்பட்ட ஆலை நிர்வாகம் தர மறுக்கிறது.

    தமிழக முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுத்து எங்களுக்கு தர வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×