search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை - பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    X

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை - பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்ததையடுத்து பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #PapanasamDam #ManimutharDam
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த தென்மேற்கு பருவமழையால் அணைகள், குளங்கள் நிரம்பின. இதைத் தொடர்ந்து சாகுபடி பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருந்தனர். போதிய அளவு வடகிழக்கு பருவமழை பெய்யாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. நேற்றும் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணை பகுதிகளில் கனமழை பெய்தது. மற்ற இடங்களில் அம்பை, சேரன்மகாதேவி, தென்காசி பகுதிகளில் மிதமான மழையும், செங்கோட்டை, சிவகிரி, ஆய்க்குடி பகுதியில் லேசான மழையும் பெய்தது.

    மலை பகுதிகளில் பெய்த மழையினால் நேற்று குற்றாலம், மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மாலையில் மழை நின்றதால் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

    நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயரத்தொடங்கியுள்ளது. பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 119.95 அடியாக இருந்தது. இன்று 120.30 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1423 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 20 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    இதே போல் சேர்வலாறு அணை நீர்மட்டம் 120.67 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 103.90 அடியாகவும் உள்ளன. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 567 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 480 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    இதே போல் கடனா அணையின் நீர்மட்டம் 79.10 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 65.75 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 59.33 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 32.5 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 29.50 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 12.74 அடியாகவும், அடவிநயினார் அணை 74 அடியாகவும் உள்ளன.

    பாபநாசம் கீழ் அணை மூலமாக மொத்தம் 1216 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    பாபநாசம்-58, சேர்வலாறு-39, மணிமுத்தாறு-24.8, கடனா-18, அம்பை-5.4, சேரன்மகாதேவி-5.8, தென்காசி-5, பாளை-4, நெல்லை-3.3., ஆய்க்குடி-3, செங்கோட்டை-2, சிவகிரி-2, குண்டாறு-1. #PapanasamDam #ManimutharDam


    Next Story
    ×