search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலைக்கு சென்று திரும்பிய சென்னை பெண்களுக்கு எதிராக போராட்டம்
    X

    சபரிமலைக்கு சென்று திரும்பிய சென்னை பெண்களுக்கு எதிராக போராட்டம்

    சபரிமலைக்கு சென்று திரும்பிய சென்னை பெண்களுக்கு எதிராக தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. #Sabarimala

    கம்பம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து கேரள அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தது. ஆனால் கோவிலுக்குள் பெண்களை நுழைய விடாமல் இந்து அமைப்பினரும் ஐயப்ப பக்தர்களும் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    சென்னையைச் சேர்ந்த மனிதி பெண்கள் அமைப்பைச் சேர்ந்த 11 இளம்பெண்கள் ஒருங்கிணைப்பாளர் செல்வி தலைமையில் சபரிமலை நோக்கி வந்தனர். பம்பையில் அவர்களை தடுத்து நிறுத்திய ஐயப்ப பக்தர்கள் அவர்களை உள்ளே நுழைய விடாமல் கோ‌ஷம் எழுப்பினர். இதனையடுத்து அவர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.

    அவர்கள் வந்த வாகனம் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. திரும்பி வரும் வழியில் கேரளாவில் கட்டப்பனையில் அந்த வாகனம் மீது சிலர் தாக்குதல் நடத்த முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    இது குறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கோவிலுக்கு வந்த பெண்களை பத்திரமாக திருப்பி அனுப்பும்படி தெரிவிக்கப்பட்டது. கேரள-தமிழக எல்லையில் அவர்கள் வாகனம் கம்பம் மெட்டு வந்தடைந்தவுடன் தேனி மாவட்ட போலீசார் அவர்களை பத்திரமாக அழைத்து வந்தனர்.

    ஆமையாறு, கம்பம், சின்னமனூர், சீலையம்பட்டி, தேனி வழியாக ஆண்டிப்பட்டி என பல்வேறு இடங்களில் அவர்கள் வந்த வாகனம் மெயின் ரோட்டில் வராமல் குறுக்கு பாதையில் போலீசார் உதவியுடன் அழைத்து வரப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் பல இடங்களில் அவர்கள் வாகனத்தை மறிக்க திரண்டனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைக்கவே அங்கு வந்து மாற்றுப்பாதையில் பெண்களை அழைத்துச் சென்றனர்.

    இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. போலீசார் அவர்களை பத்திரமாக அழைத்து வந்து மதுரை விமான நிலையம் வரை கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் 11 பெண்களும் சென்னை சென்றனர். #Sabarimala

    Next Story
    ×