search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா மரணம் பற்றிய சினிமாவை திரையிட முயற்சி- 10 பேரை பிடித்து விசாரணை
    X

    ஜெயலலிதா மரணம் பற்றிய சினிமாவை திரையிட முயற்சி- 10 பேரை பிடித்து விசாரணை

    மதுரையில் ஜெயலலிதா மரணம் பற்றிய சினிமாவை திரையிட முயன்ற 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை பழைய நத்தம் ரோட்டில் மீடியா மற்றும் குறும்பட தயாரிப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு சுமார் 45 நிமிடம் ஓடக்கூடிய ‘ஜாக்குலின்’ என்ற பெயரில் எடுக்கப்பட்ட ஒரு குறும்படம் திரையிடப்பட இருப்பதாக அழைப்பிதழ் அச்சிடப்பட்டு முக்கிய நபர்களுக்கு வழங்கப்பட்டன.

    இதனால் மாலை 7 மணியில் இருந்தே அந்த அலுவலகம் முன்பு கூட்டம் திரள தொடங்கியது. 9 மணி அளவில் சுமார் 50 பேர் அனுமதிக்கப்பட்டு அந்த குறும்படம் திரையிட தயார் செய்யப்பட்டது.

    அப்போது தல்லாகுளம் போலீசார் திடீரென அங்கு சென்று குறும்படத்தை திரையிட தடை விதித்தனர். இந்த குறும்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்று இருப்பதாகவும், நாங்கள் அதை முழுமையாக பார்த்து அனுமதி அளிக்கும் பட்சத்தில் மட்டுமே அந்த குறும்படத்தை பொதுமக்களுக்கு திரையிட வேண்டும் என்றும் கூறினர்.

    இதனால் படக்குழுவினருக்கும், போலீசாருக்கும் நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. குறும்படம் வெளியிட போலீசாரின் அனுமதி தேவையில்லை. போலீசார் பார்த்து அனுமதி வழங்க வேண்டும் என்று குறும்பட தயாரிப்பு தொடர்பான சட்ட விதிகள் எதுவும் இல்லை என்றும் படக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஆனாலும் போலீசார் அந்த குறும்படம் தொடர்பான பென்டிரைவ், கதை ஆவணங்கள் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.

    மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அந்த ‘ஜாக்குலின்’ குறும்படம் பற்றி விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

    இந்த குறும்படத்தை இசாஜ் (வயது28) என்பவர் தயாரித்துள்ளார். கால்நடை ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்த இவர் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு கடந்த 4 ஆண்டுகளாக குறும்பட தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். அவரும் குறும்படங்களில் நடித்துள்ளார்.

    கடந்த சில மாதங்களாக ‘ஜாக்குலின்’ என்ற பெயரில் குறும்படத்தை தயாரித்த இவர் அந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனங்களையும் எழுதி உள்ளார். இது தான் இவர் வெளியிடும் முதல் குறும்படம்.

    இந்த குறும்படத்தில் 15-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடித்துள்ளனர். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய பல்வேறு காட்சிகள் மற்றும் கருத்துக்கள் இந்த குறும்படத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

    டைரக்டர் இசாஜ் தனது உறவினருக்காக மருத்துவ சீட் பெறுவதற்காக கடந்த 2015-ம் ஆண்டு ரூ.20 லட்சத்தை ஒரு அமைச்சரிடம் கொடுத்ததாகவும், அவர் மருத்துவ சீட் வாங்கி கொடுக்காததால் இந்த அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் இந்த குறும்படத்தை தயாரித்து பொதுமக்கள் மத்தியில் திரையிட இசாஜ் திட்டமிட்டதாகவும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக மதுரை நகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின்பேரில் குறும்பட குழுவினர் 10 பேரிடம் தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறைவான குறும்பட டைரக்டர் இசாஜை தேடி வருகிறார்கள்.

    இதனிடையே ‘ஜாக்குலின்’ குறும்படத்தை நேற்று நள்ளிரவு யூ-டியூப் மூலம் அந்த குழுவினர் வெளியிட்டனர். அதனை சில மணி நேரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
    Next Story
    ×