search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்- சரத்குமார் பேட்டி
    X

    சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்- சரத்குமார் பேட்டி

    சபரிமலை கோவில் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கோரி சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். #sarathkumar #sabarimalaissue

    செய்துங்கநல்லூர்:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி மகா புஷ்கர விழா நடந்து வருகிறது. வல்லநாடு அருகே உள்ள முறப்பநாட்டில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் கலந்து கொண்டார். அவர் தாமிரபரணியில் புனித நீராடி கைசலாநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் சரத்குமார் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    நதியின் புனிதத்தை உணர்ந்து இந்த பகுதியில் அதிகமானோர் நீராடுகின்றனர். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த புஷ்கர விழாவில் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நதியில் ஆண்டுதோறும் புஷ்கர விழா நடந்தாலும் சரி, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்தாலும் சரி, 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்தாலும் சரி, பொதுமக்களின் ஊக்கமும், அரசு சார்பிலும் இந்த பகுதியில் சாலை வசதிகளும், உடைமாற்றும் வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    முறப்பநாட்டிற்கு இந்த விழா மிகப்பெரிய நிகழ்வு. தற்போது தான் நதியை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. தொடர்ந்து இந்த பணிகள் நடந்து வரும். பொதுமக்களாகிய நாமும் அனைத்து நீர்நிலைகளையும் பாதுகாக்க வேண்டும். குடித்து விட்டு பாட்டில்களை ஆற்றில் வீசுவது, உடைகளை ஆற்றில் விடுவது, பிளாஸ்டிக் பொருட்களை ஆற்றில் விடுவது போன்ற பழக்கங்களை கைவிட வேண்டும்.

    இயற்கை வளங்களை பாதுகாப்பது மக்களின் கடமையாகும். அரசும் மக்களோடு மக்களாக இணைந்து இயற்கை வளங்களை பாதுகாக்க உறுதுணையாக இருக்கும். சீமைக்கருவேலமரங்கள் முன்னொரு காலத்தில் தொழிலாக இருந்தது.

    ரஷ்யா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்த வேலை வாய்ப்பற்றவர்களுக்கு இது பயன்பட்டது. மேலும் அடுப்பு எரிப்பதற்கும் பயன்பட்டது. தற்போது அதற்கு மதிப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. கருவேல மரங்களை அகற்றும் பணியை துரிதமாக அரசு மேற்கொள்ள வேண்டும்.

    புஷ்கரவிழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டிய அவசியமில்லை. புஷ்கர விழா இறைவனுக்காக கொண்டாடப்படுவது. அரசு அதற்கு உரிய பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகளை செய்து கொடுத்தாலே போதும்.

    ஆகமவிதிகளின் படி உருவாக்கப்பட்டிருக்கின்ற எந்தவித ஸ்தலமாக இருந்தாலும் சரி ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கின்ற பாரம்பரியத்தையும் நம்பிக்கையும் காப்பாற்றப்பட வேண்டும்.

    சபரிமலை விவகாரத்தில் இதை உடைக்கின்ற மாதிரி இந்த தீர்ப்பு உள்ளது. இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    Next Story
    ×