search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூரில் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்த போது எடுத்த படம்
    X
    திருவாரூரில் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்த போது எடுத்த படம்

    ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு- திருவாரூரில், திமுக எம்எல்ஏக்கள் ஆர்ப்பாட்டம்

    திருவாரூரில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக எம்எல்ஏக்கல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #Hydrocarbon #DMK
    திருவாரூர்:

    நாடு முழுவதும் 55 மண்டலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

    தமிழகத்தில், கடலூர் மாவட்டத்தில் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி.க்கும் நாகை மாவட்டத்தில் வேதாந்தா நிறுவனத்துக்கும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த 1-ந்தேதி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் டெல்லியில் நடந்தது.

    தமிழகத்தை பொறுத்தவரை 3 மண்டலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக தெரிகிறது.

    மத்திய அரசின் இந்த முடிவுக்கு டெல்டா மாவட்டங்களை சேர்ந்த விவசாய சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்தை செயல்படுத்தினால் போராட்டம் தீவிரமாகும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தி.மு.க. சார்பில் இன்று (3-ந்தேதி ) திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

    அதன்படி இன்று காலை 10 மணிக்கு திருவாரூர் பஸ் நிலையம் அருகில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமை தாங்கினார்.

    இதில் முன்னாள் அமைச்சர் மதிவாணன், முன்னாள் மத்திய மந்திரி எஸ்.எஸ். பழநிமாணிக்கம், முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ். விஜயன், நாகை மாவட்ட செயலாளர் கவுதமன், நாகை வடக்கு மாவட்ட செயலாளர் நிவேதா முருகன், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா, திருத்துறைப்பூண்டி ஆடலரசன், திருவையாறு துரை.சந்திரசேகரன், கும்பகோணம் அன்பழகன், ஒரத்தநாடு ராமச்சந்திரன், திருவிடைமருதூர் கோவி.செழியன் மற்றும் தஞ்சை நாகை, திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள், மகளிரணியினர், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் எரிவாயு, எண்ணை திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்திக்கூடாது என்று கோ‌ஷங்களை எழுப்பினர்.

    இந்நிலையில் இன்று பிற்பகலில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், திருவாரூக்கு சென்று மக்களை சந்தித்து மனுக்களை பெறுகிறார்.

    மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் அனைவரும் கவர்னருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.

    அதன்படி திருவாரூருக்கு வரும் வழியில் கவர்னருக்கு பிற்பகலில் விளமல் கிராமம் பகுதியில் கருப்பு கொடி காட்டப்பட உள்ளது. இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

    கவர்னர் வருகையையொட்டி திருவாரூர் செல்லும் வழி நெடுகிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். #Hydrocarbon #DMK
    Next Story
    ×