search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் 16 கண் பாலம் மதகு வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்
    X

    மேட்டூர் 16 கண் பாலம் மதகு வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

    கடந்த 15 நாட்களுக்கு மேலாக மேட்டூர் 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வந்த நீர்திறப்பு நிறுத்தப்பட்டு விட்டது. #MetturDam

    மேட்டூர்:

    கேரள மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிர மடைந்ததால், கர்நாடகாவில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து கடந்த ஒரு மாதமாக காவிரியில் உபரிநீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டது. இதனால், கடந்த ஒரு மாதமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் இருந்தது.

    இதனை தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் அதிக அளவில் திறக்கப்பட்டதால், கடந்த ஒரு மாதமாக காவிரியில் வெள்ள கரைபுரண்டு ஓடியது.

    தற்போது கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் நீர்வரத்து விநாடிக்கு 65 ஆயிரம் கன அடியாகவும், நீர் திறப்பு 60 ஆயிரம் கன அடியாகவும் சரிந்தது.

    பின்னர், நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 16 ஆயிரம் கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 35 ஆயிரம் கன அடியாகவும் குறைந்தது. நேற்று மதியத்துக்கு மேல் நீர்திறப்பு விநாடிக்கு 20 ஆயிரத்து 800 கன அடியாக குறைக்கப்பட்டது.

    இன்று காலை நீர்வரத்து மேலும் குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் சுரங்க மின் நிலையம் வழியாக 20 ஆயிரம் கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு பாசன கால்வாய் வழியாக 800 கன அடி வீதம் தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் 120.02 அடியாக உள்ளது.

    இதனிடையே கடந்த 15 நாட்களுக்கு மேலாக 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வந்த நீர்திறப்பு நிறுத்தப்பட்டு விட்டது. மேட்டூர் அணையில் இருந்து ஒரு மாதத்துக்கு பின்னர் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால், காவிரியில் நிலவி வந்த வெள்ள அபாயம் தற்போது நீங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #MetturDam

    Next Story
    ×