search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு - போராட்டகளத்தில் 150 கிராம மக்கள்
    X

    சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு - போராட்டகளத்தில் 150 கிராம மக்கள்

    சேலம்- சென்னை இடையே 8 வழி சாலை அமைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 150 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட தயராகி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம்-சென்னை இடையே 277 கி.மீ.தூரத்திற்கு 8 வழி பசுமை விரைவு சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக சென்னைக்கு இந்த சாலை அமைக்கப்படுகிறது.

    இதற்காக 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம், 500 ஏக்கர் வனப்பகுதி, 7 ஆறுகள், 8 மலைகள் உடைக்கப்பட உள்ளதால் கான்கிரீட் வீடுகள், விவசாய கிணறுகள், தென்னை, பாக்கு தோப்புகளை அழிக்கும் சூழல் நிலவுகிறது.

    இதனால் பாதிக்கப்படும் 150 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்த திட்டத்தை செயல்படுத்த கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    மேலும் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல ஆயிரக்கணக்கானோர் திரண்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இதனால் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் விவசாயிகள் மற்றும் பொது மக்களையும் வழியிலேயே போலீசார் தடுத்து வருகின்றனர்.

    தர்மபுரி மாவட்டம் அரூரில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கடந்த 4-ந் தேதி ஊர்வலமாக புறப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்களை போலீசார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை சாவடி அமைத்து தடுத்தனர். அதையும் மீறி ஆயிரக்கணக்கான விவசாயிகள் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

    நேற்றும் அந்த பகுதியில் போலீசாரின் தீவிர கண்காணிப்பு தொடர்ந்ததால் இ.மெயில் மற்றும் கடிதங்களை கலெக்டர் அலுவலகங்களுக்கு அனுப்பி விவசாயிகள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 500-க்கும் மேற்பட்ட கடிதங்கள் நேற்று ஒரே நாளில் அனுப்பப்பட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் 8 வழிசாலையால் பாதிக்கப்படும் 5 மாவட்டங்களிலும் தொடர் போராட்டம் நடத்த பொது மக்கள் தயாராகி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உளவுத்துறை போலீசார் முகாமிட்டுள்ளனர் . அவர்கள் போராட்ட வியூகங்களை அறிந்து உயர் அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் உடனுக்குடன் தகவல்களை தெரிவித்து வருகிறார்கள்.

    இது குறித்து பாதிக்கப்படும் விவசாயிகள் கூறுகையில், சேலம்-சென்னை 8 வழி பசுமைச்சாலை திட்டத்தால் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் அழிக்கப்பட உள்ளது. ஏற்கனவே சேலம்- சென்னைக்கு 4 சாலைகள் உள்ள நிலையில் இந்த சாலை தேவையில்லை.

    கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு எங்களின் வாழ்வாதாரத்தை பறிக்க பார்க்கிறது. எத்தனை எதிர்ப்பு வந்தாலும் அதையும் மீறி போராட்டம் நடத்துவோம், எங்கள் நிலத்தை விட்டு கொடுக்க மாட்டோம் என்று கூறி வருகிறார்கள். இதனால் 5 மாவட்டங்களிலும் பதட்டமான சூழல் நிலவி வருவதால் கூடுதல் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 
    Next Story
    ×