search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் 5 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்பியது
    X

    தூத்துக்குடியில் 5 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்பியது

    தூத்துக்குடியில் 5 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்பியது. காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைகள் காலையில் வழக்கம் போல் திறக்கப்பட்டு கூட்டம் அலைமோதியது. #SterliteProtest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த சென்றனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் உண்டானது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.



    அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் தூத்துக்குடி முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டன‌ர். கடைகள் அடைக்கப்பட்டன.

    பஸ்கள் இயங்காததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்ப செய்ய மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து நேற்று மதியத்திற்கு பிறகு தூத்துக்குடியில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. காய்கறி மார்க்கெட்டில் காலையில் வழக்கம் போல் கடைகள் திறக்கப்பட்டன. இன்றும் காய்கறி கடைகளில் கூட்டம் அலைமோதியது.

    ஏராளமான மக்கள் வந்து வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்றனர். தூத்துக்குடியில் இருந்து நெல்லை, மதுரை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்களில் குறைந்த அளவே பயணிகள் இருந்தனர். மேலும் ஆட்டோக்கள், வேன்கள் வழக்கம் போல் ஓடின. கார், மோட்டார் சைக்கிள்களில் மக்கள் வழக்கமான பணிகளுக்கு சென்றனர். இன்று காலை பழக்கடைகள், சிறு சிறு ஓட்டல்கள் திறக்கப்பட்டன.

    ஆட்டோக்கள் முழு அளவில் ஓடத்தொடங்கியது. நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிக்கு செல்லவேண்டிய மினி பஸ்கள் மட்டும் இயக்கப்படவில்லை. இன்று மாலைக்குள் மினி பஸ்களையும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நகர பகுதியில் உள்ள 10 அம்மா உணவகங்களிலும் 3 நாட்களுக்கு இலவசமாக உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    ஆவின் நிறுவனம் சார்பில் சிறப்பு வேன்கள், பூத்கள் அமைக்கப்பட்டு பால் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் காயமடைந்தவர்களுக்கும், அவரது உறவினர்களுக்கும், ஏற்கனவே அங்கு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் பால், ரொட்டி, உணவுகள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநகராட்சி மூலமாக நகர் முழுவதும் கூடுதலாக குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கலவர பகுதிகள் முழுவதும் நேற்று ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டனர். இன்று அந்த பகுதியில் ஊழியர்கள் சுகாதார பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

    தூத்துக்குடியில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளதால் ஏ.டி.எம் சேவை முடங்கியுள்ளது. நகரில் உள்ள 75 ஏ.டி.எம் மையங்களும் முடங்கியுள்ளன. நகர்பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து போலீசார் தூத்துக்குடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். தூத்துக்குடி அண்ணாநகர், பிரைண்ட் நகர், கலெக்டர் அலுவலக பகுதி உள்ளிட்ட பகுதிகளில் அதிவிரைவுப்படை போலீசார் நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.  #SterliteProtest

    Next Story
    ×