search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்பாக்கி சூடு எதிரொலி - தூத்துக்குடியில் காலவரையற்ற கடையடைப்பு
    X

    துப்பாக்கி சூடு எதிரொலி - தூத்துக்குடியில் காலவரையற்ற கடையடைப்பு

    துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காலவரையற்ற கடையடைப்பு நடத்த போவதாக வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்தனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இந்த போராட் டத்துக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு போட்டது.

    தடையை மீறி பொதுமக்கள் பேரணியாக சென்றபோது கலவரம் வெடித்தது. இதனால் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் உண்டானது.

    இதில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் பலியானார்கள். ஏராளமான வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று தூத்துக்குடியில் வியாபாரிகள் கடைகளை அடைத்திருந்தனர்.

    இந்த நிலையில் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காலவரையற்ற கடையடைப்பு நடத்த போவதாக வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்தனர்.

    இது தொடர்பாக தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க தலைவர் விநாயகமூர்த்தி, பொதுச்செயலாளர் பாஸ்கர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு த‌குந்த நியாயம் கிடைக்கும் வரை தூத்துக்குடியில் காலவரையற்ற முழு கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது” என்று தெரிவித்திருந்தனர்.

    அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன. தூத்துக்குடி நகர் பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.

    தூத்துக்குடியை சுற்றியுள்ள புதுக்கோட்டை, ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், முள்ளக்காடு, முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. மருந்து கடைகளும், சில பெட்டிக்கடைகளும் மட்டுமே திறந்திருந்தன.

    Next Story
    ×