search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனநாயக விரோத போக்கை பா.ஜனதா அரசு கடைபிடிக்கிறது- நமச்சிவாயம் குற்றச்சாட்டு
    X

    ஜனநாயக விரோத போக்கை பா.ஜனதா அரசு கடைபிடிக்கிறது- நமச்சிவாயம் குற்றச்சாட்டு

    மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்காமல் ஜனநாயக விரோத போக்கை பா.ஜனதா அரசு கடைபிடிக்கிறது என்று மாநில காங். தலைவர் நமச்சிவாயம் குற்றம் சாட்டியுள்ளார்.

    புதுச்சேரி:

    கர்நாடக மாநிலத்தில் பெரும்பான்மை இல்லாத பா.ஜனதா ஆட்சியமைக்க துணைபோன கவர்னரையும், மத்திய அரசையும் கண்டித்து புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், பாலன், ஜெயமூர்த்தி, தனவேலு, விஜயவேணி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் பேசியதாவது:-

    மத்திய அரசு எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் கவர்னரை ஏஜெண்டாக நியமித்து தொல்லை கொடுத்து வருகிறது. கர்நாடகத்தில் காங்கிரசும், ஜனதாதளமும் கூட்டணி அமைத்து 116 இடங்களை பெற்றுள்ளனர்.

    ஆனால், காங்கிரஸ் கூட்டணியை ஆட்சிக்கு அழைக்காமல் பெரும்பான்மை எனக் கூறி பா.ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்துள்ளார்.

    பீகார், ராஜஸ்தான், மணிப்பூர், கோவா உள்ளிட்ட பல மாநிலங்களில் பா.ஜனதா குறைந்த இடங்களை பெற்றும் அதிகாரத்தை பயன்படுத்தியும், பணம் கொடுத்தும் மாற்று கட்சியினரை இழுத்து ஆட்சி அமைத்துள்ளனர்.

    மத்திய அரசு தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜனதா தலைவர் அமித்ஷாவும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஜனநாயக விரோத போக்கில் ஈடுபடுகின்றனர். தங்கள் விருப்பத்தை ஏற்ப அரசியலமைப்பு சட்டத்தை மாற்றிக்கொள்கின்றனர். மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்காமல் அவர்களுக்கு எதிராக ஆட்சியமைக்கும் பணியை பா.ஜனதா செய்கிறது.

    மாநில அரசுகளுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் மத்திய அரசு ஏஜெண்டாக செயல்படும் கவர்னர்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும். ராகுல்காந்தி பிரதமர் ஆவார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×