என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் 50 டாஸ்மாக் கடைகள் மூடல்
புதுக்கோட்டை,:
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து அதுகுறித்து முறையான அறிவிப்பு வெளியிடாமல் அந்த சாலைகளில் டாஸ்மாக் மது பானக்கடைகள் திறக்கப்பட்டு இருந்தால், அப்படிப்பட்ட கடைகளை உடனடியாக மூட வேண்டும்.
அது போல வகை மாற்றம் செய்யாமல் இனி புதிதாக டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதிக்கப்படுகிறது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலையோரம் அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வருகின்றன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டையில் 6 கடைகள் மற்றும் அறந்தாங்கியில் 10, கீரனூரில் 3, கீரமங்கலத்தில் 2, ஆலங்குடியில் 1 என மொத்தம் 22 கடைகள் இன்று முதல் மூடப்பட்டன.
கரூர் மாவட்டத்தில் மொத்தம் 88 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 22 கடைகள் நேற்றிரவு முதல் மூடப்பட்டன. குறிப்பாக கரூர் நகராட்சி மற்றும் குளித்தலை நகராட்சியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அப்பகுதியை சேர்ந்த குடிமகன்கள் அதிர்ச்சியடைந்துள்ளதோடு, வெளியூர்களில் உள்ள கடைகளுக்கு சென்று மது வாங்கி குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட டாஸ்மாக் அதிகாரி கூறும் போது, ஐகோர்ட்டு உத்தரவையடுத்து இந்த நடவடிக்கை எடுத்துள்ளோம். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து அது குறித்து முறையான அறிவிப்பு வெளியிட்டு மூடப்பட்ட கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை ஊழியர்களுக்கு மாற்று வேலை வழங்கப்படும் என்றார்.
அரியலூர்-பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் அதிகாரிகளுக்கு உயர் அதிகாரிகளிடம் இருந்து சரியான உத்தரவு வரவில்லை. உத்தரவு வந்ததும் டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த மாவட்டங்களின் டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அரியலூர்-பெரம்பலூர் மாவட்டத்திலும் சாலையோரம் அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளது. #Tasmac #HighCourt






