என் மலர்

  செய்திகள்

  மேட்டூர் அணை நீர்மட்டம் 44 அடியாக குறைந்தது: சேலம் உள்பட 12 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்
  X

  மேட்டூர் அணை நீர்மட்டம் 44 அடியாக குறைந்தது: சேலம் உள்பட 12 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேட்டூர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக மட்டும் இருப்பதால் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அணையின் தண்ணீர் கோடை காலத்தில் வேகமாக சரிந்தால் சேலம் உள்பட 12 மாவட்டங்களுக்கு தண்ணீர் தட்டுபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
  மேட்டூர்:

  கடந்த ஆண்டு பருவ மழை தமிழகத்தில் கைகொடுக்காத காரணத்தால் மேட்டூர் அணைக்கு போதிய அளவு தண்ணீர் வரவில்லை. கர்நாடக அரசும் காவிரி ஆற்றில் போதுமான தண்ணீரையும் திறக்கவில்லை. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவாகவே இருந்தது.

  வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந்தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட வேண்டிய தண்ணீர் திறக்கப்படவில்லை. என்றாலும் வடகிழக்கு பருவ மழை கைகொடுக்கும் என்று எதிர்பார்த்து 4 மாதங்கள் காலதாமதமாக அக்டோபர் மாதம் 2-ந்தேதி காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

  கிட்டத்தட்ட இந்த ஆண்டு 79 டி.எம்.சி. தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டது. பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று மாலை 6 மணியுடன் நிறுத்தப்பட்டது.

  இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 44.16 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 55 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய் பாசனம் மூலம் பயன்பெறும் மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

  மேட்டூர் அணையின் நீர்மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கடலூர் ஆகிய 12 மாவட்டங்களில் விவசாய தேவையையும், குடிநீர் தேவையையும் நிறைவேற்றி வந்தனர்.

  தற்போது அணையில் இருந்து நீர் திறப்பது நிறுத்தப்பட்டு உள்ளதால் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் வளர்ந்துள்ள நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. கூடுதலாக 10 நாட்கள் தண்ணீர் இருந்தால் விவசாய தேவையை பூர்த்தி செய்திருக்கலாம் என்று விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.

  இன்னும் ஓரிரு நாட்களில் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறப்பது பற்றி அறிவிப்பு வரும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

  கடந்த 2 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதே போன்ற நிலைமை தான் இந்த ஆண்டும் ஏற்படும் அபாய சூழல் ஏற்பட்டு உள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

  தற்போது அணையில் உள்ள நீரை ஒரு சில மாதங்கள் மட்டுமே குடிநீருக்கு பயன்படுத்த முடியும். அதன் பிறகு நீர்மட்டம் வேகமாக சரிந்து விட்டால் கோடை காலத்தில் சேலம் உள்பட 12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

  சேலம் மாநகராட்சி தனி குடிநீர் திட்டம், சேலம் - ஆத்தூர் கூட்டு குடிநீர் திட்டம், காடையம்பட்டி கூட்டு குடிநீர் திட்டம், பி.என்.பட்டி - வீரக்கல்புதூர் கூட்டு குடிநீர் திட்டம், வேலூர் மாநகராட்சி குடிநீர் திட்டம் போன்ற பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு மேட்டூர் அணை நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.

  இதுமட்டும் இல்லாமல் மேட்டூர் அனல்மின் நிலையம் மற்றும் பல்வேறு தனியார் தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. இதனால் தற்போதுள்ள நீர் இருப்பு குடிநீர் தேவையை ஜூன் மாதம் வரை பூர்த்தி செய்ய முடியுமா? என்பது சந்தேகத்தை எழுப்பி உள்ளது.

  கடந்த ஆண்டும் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்து ஆடியது. இதனால் பல இடங்களில் பொதுமக்கள் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த ஆண்டும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

  கோடை மழை அல்லது கடலில் புயல்கள் உருவாகி எதிர்பாராத விதமாக மழை பெய்து நீர்வரத்து இருந்தால் மட்டுமே மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். இதற்கு வருண பகவான்தான் கைகொடுக்க வேண்டும்.
  Next Story
  ×