search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை: விதியை மீறி செயல்பட்ட டாஸ்மாக் பாரில் மோதல் - வாலிபருக்கு சரமாரி வெட்டு
    X

    புதுக்கோட்டை: விதியை மீறி செயல்பட்ட டாஸ்மாக் பாரில் மோதல் - வாலிபருக்கு சரமாரி வெட்டு

    பொங்கல் தினத்தன்று புதுக்கோட்டையில் விதியை மீறி செயல்பட்ட டாஸ்மாக்கில் பார் ஊழியருக்கும் வாலிபருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அரிவாள் வெட்டு, சாலை மறியல் போன்ற சம்வங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அம்புகோவில் சாலையில் பாருடன் கூடிய அரசு டாஸ்மாக் மது பானக்கடை இயங்கி வருகிறது. தமிழக அரசு உத்தரவுப்படி காலை 12 மணிக்குத்தான் டாஸ்மாக் கடை திறக்கப்பட வேண்டும். ஆனால் இங்குள்ள மதுபானக்கடை பார் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுபானங்கள் விற்பனை ஜரூராக நடந்தது. வழக்கத்தைவிட பாரில் குடிமகன்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    அப்போது பிலாவிடுதி பகுதியை சேர்ந்த ராஜா (வயது 35) என்பவர் மது அருந்த வந்தார். அவருக்கும், பார் ஊழியரான செந்தில் (40) என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

    ஆத்திரம் அடைந்த செந்தில் தனது நண்பர் பசுபதியுடன் சேர்ந்து மது குடிக்க வந்த ராஜாவை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதற்கிடையே தகவல் அறிந்த ராஜாவின் உறவினர்கள் கறம்பக்குடி சீனிக்கடை முக்கம் பகுதியில் திரண்டு சாலை மறியல் செய்தனர். அத்துடன் சில தகராறு ஏற்பட்ட டாஸ்மாக் பாரில் நுழைந்து ரகளையில் ஈடுபட்டு சூறையாடினர். உடனே டாஸ்மாக் கடை மற்றும் பார் இழுத்து மூடப்பட்டது.

    தொடர்ந்து அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது. தகவலின்பேரில் விரைந்து வந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் முத்தலிப் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ராஜாவை அரிவாளால் வெட்டியவர்களை உடனே கைது செய்யவேண்டும், 24 மணி நேரமும் செயல்படும் டாஸ்மாக் பார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் அளித்த உறுதிமொழியை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். கிராமப்பகுதிகளில் பொங்கல் பண்டிகைகளை கட்டிய நிலையில் அரிவாள் வெட்டு, சாலை மறியல் சம்பவங்கள் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியது.
    Next Story
    ×