என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை - நெல்லை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு
    X

    நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை - நெல்லை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

    நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் நெல்லை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கொட்டிய கனமழை நேற்று நகர்புறங்களில் கனமழையாக விடிய விடிய கொட்டித்தீர்த்தது. மலைப் பகுதியில் ஓரளவுக்கு பரவலாக மழை பெய்ததால் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து வருகிறது.

    அணை பகுதிகளில் அதிகபட்சமாக நம்பியாறு அணையில் 88 மில்லி மீட்டர் மழையும், மணிமுத்தாறில் 41.8 மில்லி மீட்டர் மழையும், கருப்பாநதி அணையில் 35 மில்லி மீட்டர் மழையும், பாபநாசத்தில் 26 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

    பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1016 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அங்கு நேற்று 74.45அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 1 அடி உயர்ந்து 75.20 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 473 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் நேற்று 53.90 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 54.90 அடியாக உயர்ந்துள்ளது.

    சேர்வலாறு அணைப்பகுதியில் 10 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அணையின் நேற்றைய நீர்மட்டம் 87.40 அடியாக இருந்தது. இன்று 1 அடி உயர்ந்து 88.78 அடியாக உள்ளது.

    கடனா நதி அணையில் நேற்றை விட 2 அடி உயர்ந்து இன்று 63 அடியாக உள்ளது. ராமநதி அணையில் இன்று 58.05 அடியாகவும், கருப்பாநதி அணையில் 57.09 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணையில் 3.25 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    நம்பியாறு அணைக்கு வழக்கத்தை விட அதிகமாக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. நேற்று ஒரே நாளில் நம்பியாறு அணை நீர்மட்டம் 10 அடி உயர்ந்து 16.08 அடியாக இருந்தது.

    இன்று நீர்மட்டம் ஒரே நாளில் மேலும் 3 அடி உயர்ந்து 19.02 அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணையில் 51 அடியும், அடவி நயினார் அணையில் 99.50 அடியும் இன்று நீர் மட்டம் உயர்ந்துள்ளது. குண்டாறு அணை நிரம்பும் தருவாயில் 35.87 அடியாக உயர்ந்துள்ளது.

    இன்று காலை நகர்ப்பகுதிகளில் மழை விட்டாலும், மலைப்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. மழை இல்லாமல் கடந்த 2 ஆண்டு களாக நெல்லை- தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயம் பொய்த்து போனது.

    தற்போது ஓரளவு மழை பெய்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பதாலும் விவசாயத்துக்காக பாபநாசம், அடவி நயினார், கொடுமுடியாறு, ராமநதி, கருப்பாநதி, கடனாநதி ஆகிய 6 அணைகள் திறக்கப்பட்டுள்ளதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் அநேக இடங்களில் நாற்றங்கால் பயிர் செய்யப்பட்டுள்ளது. விரைவில் வயல்கள் உழவு செய்து நாற்று நடும் பணி தொடங்க உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    நெல்லை -94
    சேரன்மாதேவி -67.2
    மணிமுத்தாறு -41.8
    ஆய்குடி -5.2
    தென்காசி -4.8
    குண்டாறு -1

    Next Story
    ×