என் மலர்
செய்திகள்

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஒரு வாரத்தில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்: செங்கோட்டையன்
கோபி:
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கோபி, கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா கோபி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி வர வேற்றார்.
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கோபி சட்டமன்றத் தொகுதியில் நம்பியூரில் அரசு கலைக் கல்லூரியும், டி.ஜி.புதூரில் தொழிற் பயிற்சியும் (ஐடிஐ) தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நம்பியூர் பகுதியில் அரசு சார்பில் விளையாட்டு ஸ்டேடியம் கட்டப்பட உள்ளது.
கோபியில் தொழிற்பயிற்சி (ஐடிஐ) மையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இங்கு சேரும் மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக லேப்டாப், சைக்கிள், மற்றும் ரூபாய் 500 அரசு சார்பில் ஊக்கத் தொகையாக வழங்கப்பட உள்ளது.
இன்னும் 15 நாட்களில் தமிழக கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது. இது குறித்து சிறந்த கல்வியாளர்களையும் அழைத்துப் பேசி வருகிறோம்.
கல்வித்துறையில் கடுமையாக உழைத்து பிளஸ்-1 மாணவர்களுக்கு 54 ஆயிரம் வினா, விடை கொண்ட புத்தகம் தயார் செய்யப்பட்டு வருகிறது. இன்னும் 1 மாதத்தில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும்.
இன்னும் ஒரு வாரத்தில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். இதில் ஒரு சிம் கார்டு இணைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்கிறார்களா? என்பது குறித்து பெற்றோர்களுக்கு தெரியவரும். தமிழகத்தில் ஸ்மார்ட் வகுப்புகள் அடுத்த மாதம் 3 ஆயிரம் பள்ளிகளில் ரூ. 60 கோடி செலவில் தொடங்கப்பட உள்ளது.
எதிர்காலத்தில் பாடத்திட்டங்களை மாற்றுவதன் மூலம் பல்வேறு வேலை வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். படித்து முடித்த உடன் வேலை என்பதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு உருவாக்கும்.
ரேங்க் சிஸ்டம் மூலம் மாணவ, மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வு நடைபெறும் நாட்களையும், முன்னதாகவே, இந்த ஆண்டு எஸ்.எம்.எஸ். மூலம் செல்போனில் 19 லட்சம் மாணவர்கள் தேர்வு முடிவுகளையும் அறிந்துள்ளனர்.
இந்த ஆண்டு 42 கலை அறிவியல் கல்லூரிகளையும், 4 பொறியியல் கல்லூரி, 9 தொழிற்பயிற்சி மையத்தையும், 4 பாலிடெக்னிக் கல்லூரிகளையும் துவக்கியுள்ளது. எவ்வளவு இடர்பாடுகள் இருந்தாலும் இந்த அரசானது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மேலும், இந்த ஆண்டு 150 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கல்வித்துறைக்கு ரூபாய் 26,942 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
நிகழ்ச்சியில், கோபி ஆர்.டி.ஒ. கோவிந்தராஜன், தாசில்தார் பூபதி, சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்து ரவிச்சந்திரன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி(எ) சுப்பிரமணியம், கோபி கலைக்கல்லூரி செயலாளர் தரணீதரன், முதல்வர் செல்லப்பன், நிர்வாக அலுவலர் கந்தசாமி, நம்பியூர் குமுதா கல்வி நிறு வனங்களின் தாளாளர் ஜனகரத்தினம், குருகுலம் பள்ளி முதல்வர் ரங்கராஜன், மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவகள் கலந்து கொண்டனர்.






